உடுமலை:ஏழு குளங்களின் உபரி நீர் வெளியேறி, மழைக்காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்படும், ராஜவாய்க்கால் பள்ளத்தை துார்வாரி, கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.உடுமலை ஏழு குள பாசன திட்ட குளங்களில் இருந்து மழைக்காலங்களில், உபரி நீர் பல்வேறு ஓடைகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த ஓடைகளில், பல்வேறு குடியிருப்பிலிருந்து, வெளியேறும் மழை நீரும் கலந்து வெள்ளமாக செல்லும். அவ்வாறு, உடுமலை நகரை ஒட்டி அமைந்துள்ள ராஜவாய்க்கால் பள்ளம் பல கி.மீ., துாரம் பயணித்து, உப்பாறு ஓடையுடன் இணைகிறது.இந்த பள்ளம், பல ஆண்டுகளாக முழுமையாக துார்வாரப்படாமல், ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் செல்லும் பாதை குறுகலாக மாறி விட்டது. மேலும், நகரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த பள்ளத்தில், கலக்கிறது. நகரில், பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, கழிவு நீர் கலப்பது தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிப்பாளையம் பகுதியில், கழிவு நீர் கலப்பது தொடர்கதையாகவே உள்ளது.பல கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக இருந்த, இப்பள்ளம் தற்போது, கழிவு நீர் சாக்கடையாக மாறி விட்டது. பருவமழை காலங்களில், இந்த ஓடையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால், முறையாக துார்வாரப்படாததால், பல்வேறு இடங்களில், திசை மாறி, மழை நீர் சென்று விடுகிறது.வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜவாய்க்கால் பள்ளம், ஏரிப்பாளையம் பாலத்திலிருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு துார்வாரப்பட்டது. பிற பகுதிகளிலும், துார்வாரும் பணிகளை மேற்கொண்டு, கழிவு நீர் கலப்பதை தவிர்த்தால், ராஜவாய்க்கால் பள்ளம், பல கிராமங்களின் முக்கிய நீராதாரமாக மாறி விடும்.இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE