பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க, ஆண்டுதோறும் ஏப், மே, மாதங்களில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.இதில், பள்ளி செல்லாமல் இருக்கும், ஆறு முதல், 17 வயதுள்ள குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.நடப்பாண்டு கொரோனா தொற்று பரவலால், மே மாதம் கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், கடந்த, 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும், கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.வட்டார வள மைய அதிகாரிகள் கூறியதாவது:நவ., 21ம் தேதி முதல், டிச., 15ம் தேதி வரையில் கணக்கெடுப்பு நடக்கிறது. இதில், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கிராமங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 95 பள்ளிகள், 141 குடியிருப்புகள் உள்ளன. வடக்கு ஒன்றியத்தில், 100 பள்ளிகள், 112 குடியிருப்புகள், ஆனைமலை ஒன்றியத்தில், 99 பள்ளிகள், 141 குடியிருப்புகளில் கணக்கெடுப்பு நடக்கிறது.மூன்று ஒன்றியங்களிலும் சேர்த்து இதுவரை பள்ளி செல்லாதவர்கள், இடைநிற்றல் என, 24 குழந்தைகள் கண்டறிந்துள்ளோம்.கிராமங்கள், பழங்குடியின செட்டில்மென்ட்கள், செங்கல் சூளை, தொழிற்சாலைகளில் கணக்கெடுப்பு நடத்துகிறோம். குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லாதவர்கள், இடைநிற்றல் ஆனவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்டறியப்படும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE