உடுமலை:உடுமலை அருகே, வீட்டுமனை பட்டா மட்டும் வழங்கி, இடம் ஒதுக்கீடு செய்யாததால், வெறும் ஆவணத்தோடு, பயனாளிகள், பல ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை தாலுகா பண்ணைக்கிணறு கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 10 ஏக்கர் நிலம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்டது. கடந்த, 2014ல், 370 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இலவச வீட்டுமனை பட்டா, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.போதிய போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில், பட்டா வழங்கப்பட்டதால், பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர்களுக்குரிய இடத்தையும், வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தரவில்லை.எனவே, இலவச வீட்டுமனை பட்டாவிற்கான உத்தரவு நகல்களை மட்டும் கையில் வைத்து கொண்டு செய்வதறியாமல், பயனாளிகள் திணறி வருகின்றனர். வீடு கட்ட இடமில்லாமல், தவித்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக, பண்ணைக்கிணறு, இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.பயனாளிகள் கூறியதாவது: பண்ணைக்கிணறு கிராமத்தில், எவ்வித வசதிகளும் இல்லாத இடத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட இடத்துக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. பட்டா இடத்தை அளவீடு செய்வது ஒதுக்கவில்லை. இடம் அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக, அரசியல் கட்சியினர் சிலர் வசூலிலும் ஈடுபட்டனர்.நீண்ட காலமாக பட்டா வழங்கிய இடத்தில், குடியேறாததால், பலரின் இலவச வீட்டு மனை பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கின்றனர். இது குறித்து வருவாய்த்துறையினர் உரிய விளக்கமளிக்க வேண்டும். மாற்று இடத்தில், இடம் வழங்கி, வீடு கட்ட அரசு உதவ வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE