ஆண் இயற்கையின் படைப்பில் மிகவும் அற்புதமான, அழகான, உன்னதமான படைப்பு. அவனது ஆண்மையால் அழகோ? அல்லது அவனது பொறுப்புகளால் உன்னதமோ? அல்லது அவனது கடமைகளால் அழகோ? தன் பிறப்பிலிருந்து இறுதிகாலம் வரை ஒரு ஆணின் பல்வேறு அவதாரங்கள் வியக்கத்தக்க வகையில் அமைந்து உள்ளது.
பிறக்கும்போது பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிறான். தாத்தாவிற்கு எதிர்கால வாரிசாக, பாட்டிக்கு கடைசி காலத்தில் கொள்ளி வைப்பவனாக, அப்பா விற்கு தன் எதிர்காலமாக, அம்மாவிற்கு தன் தந்தையாக, உடன்பிறந்தோர்க்கு சுமை தாங்கியாக நீண்டுகொண்டே இருக்கிறது அவனது பொறுப்புகளும், பயணங்களும்.
சுகமான சுமைகள்
இவ்வுலகை கண்ட அடுத்த நொடி முதல் அவன் வாழ்வு பெரும்பாலும் பிறருக்காக சுமைகளை சுகங்களாக சுமப்பதிலும், விட்டுக் கொடுப்பதிலும் செலவாகிறது.ஆண் என்ற படைப்பு இல்லையேல் இவ்வுலகில் எந்த சுழற்சிக்கும் வேலையேயில்லை. பெண்மையின் தாய்மையைப் போற்றும் இவ்வுலகில் ஆண்மையின் கடமைகளை, மகனாக, சகோதரனாக, கணவனாக, தந்தையாக, ஒரு சமுதாயத்தின் நல்ல குடி மகனாக இன்னும் பல இவற்றைப் பற்றி பேச மறந்து போகிறோம்.
ஆண் சிறுவயதிலேயே விட்டுக் கொடுக்கும் பண்பை துவங்குகிறான். ஆம், சகோதரிக்கு இனிப்புகளையும், பொம்மைகளையும். இள வயதில் தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கிறான், குடும்பத்திற்காக. தந்தையின் சுமைகளை குறைக்க தன் கனவுகளை மறைக்கிறான். தன் தாயின் எதிர்பார்ப்புகளுக்காக தன் விருப்பங்களை துறக்கிறான். தன் மனைவி மக்களுக்காக அனைத்து உணர்வுகளையும் இழக்கிறான். அனைத்தும் இழந்த பின்னும் அழகுதான்... தாய்க்கு மகனாக... மகளுக்கு தந்தையாக.
நற்குணங்கள்
" கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு"
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப தனது கடமையில் இதுவென்று அறிந்து நற்குணங்களை மேற்கொண்டு நல்ல குணங்களை எல்லாம் இயல்பாய் பெற்று ஒரு சிறந்த தலைவனாகவும் ஆகின்றான். அன்பிற்கும் அவனே... உழைப்பிற்கும் அவனே... தாய்மைக்கும் அவனே... தோழமைக்கும் அவனே..... கண்ணியத்திற்கும் அவனே... யாரும் துரத்தாமலே ஓடுபவனும் அவனே...எதையும் தொலைக்காமல் தேடுவதும் அவனே.
இன்னும் அவன் தேடல்கள் நீண்டு கொண்டேதான் இருக்கும் அவன் இறுதி மூச்சுவரை.அழத் தெரிந்தவன் தான், ஆனால் கண்ணீரை மறைக்க தெரிந்தவன். அன்பானவன் தான், ஆனால் அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன். பணம் தேடுபவன் தான், ஆனால் தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னிலை மறந்து ஓடுபவன். சிரிக்கத் தெரிந்தவன் தான், ஆனால் சிரிக்க மறந்து சிந்தனையில் ஆழ்ந்து இருப்பவன்.கரடுமுரடானவன்தான், ஆனால் நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன். மொத்தத்தில் அவன் ஒரு தேவதை.
மனதளவில் கடவுள்
மனதளவில் ஒவ்வொரு ஆணும் ஒரு அழகான உன்னத கடவுள்தான். சிறப்புகள் நிறைந்த ஒவ்வொரு ஆணும் போற்றுதலுக்குரியவன்தான். இருபது வயதில் சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி, அதை அடிக்கடி கையால் 'ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை.
முப்பது வயதில் பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று கொஞ்சம் பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு,நாற்பது வயதில் "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் வீசி கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம். இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம்.
சுயகட்டுப்பாடு
திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு வெற்றி கிட்டும்.இச்சமூகம் ஆண்களிடம் எதிர்பார்ப்பது ஆண்கள் என்பவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும். வீரம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கே அதிகம்.
எதிர்கொள்ளும் பிரச்னைகள்
அலுவலகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதைவிட ஏராளம். இதனாலேயே இவற்றினிடையே பயணம் செய்யும் அவன் மனம் மற்றும் உடல் பாதிக்கப்படுகிறது.ஆண், பெண் இருவரும் சமம் என்றாலும், பொதுவாக இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பது முக்கியம். ஆண்கள் என்றால் சம்பாத்தியம். இதுதான் இந்த பொதுச்சமூகம் சொல்வது.
ஒரு ஆண் சம்பாதிக்காமல் இருந்து விட்டால் அவனை ஆணாகவே பார்க்க மறுக்கிறது. இதில் உத்தியோகம் புருஷ லட்சணம் என்ற பழமொழி வேறு தேய்ந்த ரேடியோ போன்று எல்லாருடைய வீட்டிலும் ஓடிக்கொண்டிருக்கும். அதுபோல ஓட ஆண்கள் என்ன இயந்திரமா? அவர்களும் மனிதர்களே.அன்பு காட்டத் தெரியாதவன் ஆண் அல்ல... அன்பைக் காட்ட நேரமில்லாமல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு ஜீவன் அவன் என்பதே உண்மை.
இயந்திரம் அல்ல
ஆண்கள் இயந்திரம் அல்ல; அவர்களும் சாதாரண மனிதர்களே. ஆனால் குடும்பத்தின் தேவைக்காக தன்னையே அழித்துக்கொள்பவர்கள்.நவீன உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். இருவருக்கும் பொறுப்பு உண்டு. ஆனால் திருமணத்திற்கு மாப்பிளை தேடும் போது, பெண்ணை விட ஆண் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கிறது.
எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியாது என்பது நிதர்சனம்.பெண்கள் தங்களுடைய கவலைகளை புலம்பிவிடுவார்கள். ஆண்கள் அவ்வாறு செய்வதில்லை. காரணம். ஆண்கள் என்றால் கவலைகளை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது, அழக்கூடாது என்று அவர்களுடைய உணர்ச்சிகளை வெளியில் காட்டமுடியாத படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
ஆண்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று வரையறை வேறு.பதற்றம், கவலை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. ஆண்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும் என்று ஆண் என்ற பெருமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-முனைவர் இரா. சரவணன்
உதவி பேராசிரியர்
எம்.ஜி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி, காட்டுமன்னார்கோயில்
97867 91911
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE