மதுரை:மத்திய அரசு பதவி இனங்களில் உதவிபொறியாளர் என்ற பெயர் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒப்பீடு செய்து மீண்டும் மீண்டும் திட்டமிட்டு சம்பள குறைப்பு செய்யப்படுகிறது என தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மதுரையில் சங்க பொது செயலாளர் முருகன் கூறியதாவது:பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகள் முதல்வரிடம் உள்ளன. இருப்பினும் அந்த துறைகளில் சம்பளவிகிதம் பெறுவதில் பத்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. ஆறாவது சம்பளக்குழுவின் போது அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு வழங்கிய நியாயமான சம்பள விகிதத்தை தன்னிச்சையாக குறைத்து அரசாணைஎண் 242 வெளியிடப்பட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று குறை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்போது தீர்வு கிடைக்கும் என பொறியாளர்கள் நினைத்தனர். ஆனால் எந்த அரசாணைக்கு தடை வழங்கப்பட்டதோ அதே அரசாணையை குழுவின் பரிந்துரையாக பெற்று மீண்டும் பொறியாளர்களின் சம்பளம் குறைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு உதவி பொறியாளர்களுக்கும் ரூ.17 ஆயிரம் வரை மாத சம்பளத்தில் இழப்பு ஏற்படும்.தொழிற்சார்ந்த கல்விகள் என வகைப்படுத்தப்பட்ட மருத்துவம், கால்நடை, மருத்துவம், சட்டம், பொறியியல், வேளாண் பொறியியல் படிப்புகளை கல்வித்தகுதியாக கொண்ட அரசுபதவிகளில் பொறியாளர் பதவிகள் மட்டும் தரக்குறைவாக நடத்தப்படுகிறது.
மருத்துவம், கால்நடை மருத்துவர் பணிகளுக்கு பொறியாளர் பணி சற்றும் தகுதி குறைவானது அல்ல. எனவே ஏற்கனவே பெற்று வரும் சம்பளத்திற்கு இணையான புதிய சம்பள விகிதங்களை வழங்க முதல்வர் முன்வர வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE