வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று அதிகாலை முதல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது.வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், சென்னை அருகே இன்று கரையை கடக்க உள்ளது. புயலில் நகர்வு காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை துவங்கியது. நேற்று அதிகாலை முதல், பகல் முழுதும், மழை வெளுத்து வாங்கியது.இதனால், சென்னை மற்றும் புறநகரில், அண்ணாசாலை, 1௦௦ அடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கடல் சீற்றம்நேற்று முன்தினம், எண்ணுார், திருவொற்றியூர் கடற்கரைகளில், படகுகள் பத்திரமாக பாறைகளில் கட்டி வைக்கும் பணியை, மீனவர்கள் மேற்கொண்டனர். தவிர, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், வார்ப்பு பகுதிகளில், விசைப்படகுகள் பத்திரப்படுத்தப்பட்டன. நேற்று அதிகாலை, புயல் காரணமாக, காசிமேடு, எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.ஆக்ரோஷமாக உயரே எழும்பிய அலைகள், பயங்கர சத்தத்துடன், துாண்டில் வளைவுகளில் மோதின.சீற்றம் காரணமாக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வார்ப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த சிறிய படகுகள், ராட்சத கிரேன் மூலம், அருகேயுள்ள மைதானத்திற்கு இடமாற்றம் செய்யும் பணி, நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆபத்தான நிலையில், துாண்டில் வளைவுகள், பாறைகளில் நின்று, கடல் சீற்றத்துடன், 'செல்பி' எடுக்க, பலரும் கூடினர். அவர்களை போலீசார் கவனித்து விரட்டினர். செம்பரம்பாக்கம் ஏரிவடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஒரு வாரமாக, மழை பெய்யாததால், நீர்வரத்து நின்றது.புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், பரவலாக மழை பெய்து வருவதால், ஏரிக்கு மீண்டும் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால், ஒரே நாள் இரவில், 1 கோடி கன அடி நீர் கிடைத்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 21.32 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு, 648 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.இன்று கனமழை தொடரும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் அதிகளவில் கிடைத்தால், ஏரி திறக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, பொதுப்பணித் துறையினர், ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் அலை அதிகரித்து காணப்படுகிறது. இதை, அப்பகுதி மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்து சென்றனர். போலீசார், அவர்களை விரட்டி அடித்து வருகின்றனர்.இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி நேற்று மாலை ஆய்வு செய்தார்.சென்னை புறநகர்செம்பாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால், திருமலை நகர் பகுதிக்கு உட்பட்ட, எட்டு தெருக்களில், வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திருமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:ஒவ்வொரு மழைக்கும், செம்பாக்கம் நகராட்சியின், திருமலை நகர், 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தெருக்களில், வெள்ளம் புகுந்து விடுகிறது.2015 வெள்ளத்திற்கு பின், ஏரி உபரிநீர் கால்வாயை ஆய்வு செய்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா, திருமலை நகர் வடக்கு விரிவில் உள்ள, சரஸ்வதி நகருக்கு செல்ல, இணைப்பு பாலம் அமைக்க உத்தரவிட்டார்.இந்தாண்டு, ஜூனில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதனால், திருமலை நகர், 2வது உட்பட, நான்கு தெருக்கள் பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன.அதேநேரம், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட தெருக்கள், இம்முறை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பீர்க்கன்காரணைதாம்பரம் அடுத்த புது பெருங்களத்துார், ஜி.எஸ்.டி., சாலையோரம், பீர்க்கன்காரணை பெரிய ஏரி உள்ளது. 2017க்கு முன், ஏரியின் உபரிநீர், பழைய ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ள கால்வாயில் சென்று, ரயில்வே பாலத்தை கடந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும்.சுற்றுச்சூழல் பூங்கா திட்டத்திற்காக, இக்கால்வாய் மூடப்பட்டு, ஏரிக்கரை சாலையில் இருந்த ஒரு மதகு அகற்றப்பட்டு, மூன்று மதகுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மதகுகள் எதிரில் செல்லும், கால்வாயில் இருந்த, 69 ஆக்கிரமிப்பு வீடுகள், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி, சித்தேரிக்கு செல்ல வசதியாக, 2017 நவம்பரில் அகற்றப்பட்டன.அதேநேரம், கால்வாயின் கரைகள் கட்டி முடிக்கப்படாமல், இன்று வரை, அரை குறை நிலையில் உள்ளதால், உபரிநீர் சித்தேரிக்கு சென்றாலும், பீர்க்கன்காரணை பகுதி, வெள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேருடன் சாய்ந்த மரங்கள்!கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகர், 11வது நிழற்சாலையில் நின்ற பெரிய மரம் ஒன்று, நேற்று காலை வேருடன் சாய்ந்தது. இந்த மரம், சாலையின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அச்சாலை வழியாக வந்த வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மயிலாப்பூர், நாகேஸ்வரா பூங்காவில் இருந்த, மிகப்பெரிய துாங்கு மூஞ்சி மரம் வேருடன் சாய்ந்தது.நேற்று மதியம், மயிலாப்பூர், பி.எஸ். சிவசாமி சாலையில் இருந்த, வேப்பமரம் வேருடன் சாய்ந்தது. நேற்று மாலை, ஆர்.ஏ.புரம், நான்காவது குறுக்கு தெருவில் இருந்த, பெரிய மரம் வேருடன் சாய்ந்தது. சி.வி.ராமன் சாலையில் இருந்த, மரம் வேருடன் சாய்ந்தது. சாய்ந்த மரங்களை மாநகராட்சியினர் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE