உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.சுப்பிரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேடையில், அநாகரிகமாக பேசுவதில், தி.மு.க.,வினரை, வேறு எந்தக் கட்சியினராலும் வெற்றி கொள்ள முடியாது. தி.மு.க.,வினரின் பேச்சை, 'அநாகரிகம்' என்பதை விட, 'தரம் தாழ்ந்த' என்று குறிப்பிடுவதே, சரியாக இருக்கும்.'நாம், யாரை விமர்சிக்கிறோம்; நம் தகுதி, தராதரம் என்ன?' போன்ற எது குறித்தும், தி.மு.க.,வினர் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா, ராஜிவ், சோனியா என, அவர்கள் வம்சத்தை, தி.மு.க.,வினர் போல, வேறு யாரும் தரம் தாழ்ந்து, அநாகரிகமாக பேசியதே இல்லை. எவ்வளவு கேவலப்படுத்தினாலும், தி.மு.க., உடன் கூட்டணி வைக்கும், காங்கிரசாரின், 'தன்மானத்தை' பாராட்டாமல் இருக்க முடியாது.
'அவள் ஒன்றும், படிதாண்டா பத்தினியுமல்ல; நான் ஒன்றும், முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்பது, ஒரு நடிகையை குறித்து, தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை பேசிய விமர்சனம். தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே!
நாக்கில் நரம்பில்லாமல், நடிகையை தரங்கெட்டு விமர்சித்தோர், காங்கிரசின் தலைவியை விமர்சித்த விதம் கேட்டால், கொதித்து எழுவீர்.கடந்த, 1979 அக்டோபரில், மதுரையில், முன்னாள் பிரதமர் இந்திரா பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு, பழ.நெடுமாறன் ஏற்பாடு செய்திருக்கிறார்.அவசர நிலை அறிவித்து, ஆட்சியைக் கலைத்த, இந்திராவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்ட, தி.மு.க.,வினர் திட்டமிட்டிருந்தனர்.

தி.மு.க.,வின் போராட்டம் என்றால், அதில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். கொடிகளே, குண்டாந்தடிகளாகும்; பேன்ட் பாக்கெட்டுகளில், கணிசமான அளவில் கற்கள் நிறைந்திருக்கும்.'கருப்புக் கொடி காட்டுகிறோம்' என்ற, தி.மு.க.,வினர், இந்திராவின் மீது கல் வீசி தாக்கினர்; இதனால், அவர் நெற்றியில் காயம் பட்டு, ரத்தம் வழிந்தது. கல் வீச்சு குறித்து, காங்கிரசார், தி.மு.க.,வினரை கடுமையாக விமர்சனம் செய்தனர். பதிலுக்கு, 'இந்திராவிற்கு, மாத விடாயாக இருக்கும்; அதனால் வந்த ரத்தம் போலிருக்கிறது' என, விஷத்தை கக்கினார், கருணாநிதி.
நம் நாட்டின் பிரதமராக, ஒரு மாபெரும் அரசியல் கட்சி தலைவராக இருந்த பெண்மணியை பார்த்து செய்யும் விமர்சனமா இது? கருணாநிதியின் குடும்பப் பெண்கள் குறித்து, காங்கிரசார் அநாகரிகமாக பேச மாட்டார்கள் என்ற தைரியம் அவருக்கு!இவ்வளவு கேவலமாக, அநாகரிகமாக, தரம் தாழ்ந்த, ஓர் அரசியல் கட்சித் தலைவரின் வாரிசைத் தான், 'முதல்வர் ஆக்கியே தீருவோம்' என, 'தன்மானம்' மிக்க, காங்கிரசார் இன்று குரல் கொடுக்கின்றனர்.
பதவிக்காக, தி.மு.க.,வினரிடம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்துக் கிடக்கும் காங்கிரசாரின், 'கொள்கை'யை என்னவென்று சொல்வது?பதவிக்காக பல் இளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தான் வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது; ஆனால், அவை நமக்கு இருக்கின்றனவே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE