திருப்பூர்:டெங்கு ஏற்படுத்தும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால், காய்ச்சல் தடுப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.திருப்பூரில், டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.டெங்கு பாதிப்பு மற்றும் அறிகுறி காணப்படும் வார்டுகளில், ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேநேரம், கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து, கொசு ஒழிப்புப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.கண்காணித்து கொசுக்களை அழிக்க தேவையான அளவு ஆய்வாளர்கள் இல்லாததால், காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தற்போது உள்ள, சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டே, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு களப்பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து, பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.சுகாதார ஆய்வாளர்களை முழுமையாக நியமிக்க, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தற்போது, டெங்கு ஏற்படுவதை தடுக்க சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE