கேரளாவில், சமூக வலைதளங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. சமூக வலைதளங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லை மீறிய தனிநபர் தாக்குதல்களும், கண்ணியமற்ற கண்டனங்களும் அதிகரித்து விட்டன. அதைத் தடுக்கவே அரசு, இந்த முயற்சியை எடுத்துள்ளது.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'இதுபோல, நாடு முழுதும் வந்தால் தான் சரியாக இருக்கும். சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் அதிகரித்து விட்டது...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வந்து அரசு விழாக்களில் கலந்து கொண்டார். அந்த விழாக்களை, கட்சி மேடையாக மாற்றிக் கொண்டனர், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர். இது, காலம்காலமாக காப்பாற்றப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கு விரோதமானது.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்
'தமிழகத்தின் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை கவனித்து தான், அமித் ஷாவும் அவ்வாறு செயல்பட்டிருப்பாரோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
எட்டு மணி நேர வேலை என்பது, பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமை. அதை தர மறுக்கும் மத்திய அரசின் செயலை, அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி

'அரசு இன்னும் உத்தரவிடவில்லை. யூகச் செய்திக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கடந்த லோக்சபா தேர்தலில், அந்தக் கட்சிகளை புறக்கணித்தது போல, வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும் புறக்கணிப்பர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'நல்ல ஆரூடம். தேர்தலில் போணியாகவில்லை என்றால், நல்ல தொழில் கைவசம் உள்ளது...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
காவல் துறையினருக்கு என, திட்டவட்டமான பணி நேரமோ, ஓய்வு, ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. வெறும் பேச்சாக இல்லாமல் நடைமுறைபடுத்த வேண்டும்.
- நடிகர் கமல்ஹாசன்
'போலீசார் தயவு வேண்டும் என்பதற்காக, அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஆதரிக்கிறீர்களோ... என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை.
அ.தி.மு.க.,வை யாரும் கைப்பற்ற முடியாது. ஆண்டவன் கட்சியான, அ.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,காரர்கள் தான் ஆள முடியும். பா.ஜ., கட்சி, அ.தி.மு.க.,வின் நண்பர். மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க.,வின் நண்பர்.
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
'அப்போ, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், கடவுள் ஆதரவு இல்லாத கட்சிகளா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE