வீரபாண்டி: குடிபோதையில் நடந்த தகராறில், தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகனை, போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, பெத்தாம்பட்டி பெருமாள் கோவில்காட்டை சேர்ந்தவர் முருகன், 55; விவசாயி. இவரது மனைவி, 15 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் ராஜ்குமார், 30, மகள்கள் சுகவனேஸ்வரி, 32, சவுந்தர்யா, 25. மூவருக்கும் திருமணமாகி, தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். ராஜ்குமாரின் மனைவி அகல்யா, நான்கு ஆண்டுக்கு முன் பிரிந்துசென்றுவிட்டார். இதனால், தந்தை, மகன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கரில், தந்தையுடன், மகன் விவசாயம் செய்ததோடு, 'ரேடியோ, 'டிவி' பழுதுபார்ப்பு பணிக்கும் சென்றுவந்தார். பின், தனியாக, 'சர்வீஸ் சென்டர்' வைக்க பணம் கேட்டு, தந்தையிடம் தகராறு செய்தார். இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த இருவர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அதில், இரும்பு கம்பியால் ராஜ்குமார் தாக்கியதில், முருகன் உயிரிழந்தார். நேற்று காலை, இதையறிந்த மகள்கள், ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், தலைமறைவான ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE