திருச்சி: விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு, வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டதால், விவசாயிகள் அரை மொட்டை அடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு அறிவித்தார். நவம்பர், 26 மற்றும், 27ம் தேதிகளில், உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு முன் உண்ணாவிரதம் இருப்பதற்காக, விவசாய சங்கத்தினர், ரயில் மூலம், நேற்று முன்தினம் இரவு டில்லி செல்ல திட்டமிட்டு இருந்தனர். அய்யாகண்ணு உட்பட, 131 விவசாயிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார், திருச்சி, அண்ணாமலை நகரில் உள்ள அய்யாகண்ணு வீட்டிற்கு சென்று, அவரை வீட்டிலேயே சிறை வைத்தனர். இதைக் கண்டித்து, அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள், நேற்று காலை, அவரது வீட்டு முன், அரை மொட்டை அடித்து, திருச்சி- கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர். ''விவசாயிகளின் ஆலோசனையை கேட்காமல், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை,'' என, அய்யாகண்ணு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE