நாமக்கல்: பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்த, மாவட்ட அளவில், அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையான பள்ளியில் சேர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி. பேரூராட்சிகளின் குடியிருப்பு களிலும், டிச., 10 வரை, பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள். பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை கொண்டு கணக்கெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், செங்கல் சூளைகள், சாயத் தொழிற்சாலைகள், கோழிப் பண்ணைகள், அரிசி ஆலைகள், கல் குவாரிகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் இயங்கும் இடங்களில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து, தொழில் நிமித்தம் காரணமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குழந்தைகள், பல்துறையினருடன் இணைந்து கண்டறியப்பட உள்ளனர். கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்படும் குழந்தைகள், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களின் கல்வி மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், தங்கள் பகுதிகளில், பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள் இருந்தால், அதன் விபரத்தை, அருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE