கடலுார் : கடலுார் மாவட்ட நெடுஞ்சாலைகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, காவல் துறை சார்பில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது' என்று ஐ.ஜி., நாகராஜன் தெரிவித்தார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களில் நிவாரணம், கண்காணிப்பு பணிகளுக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்திற்கு நியமித்துள்ள வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன் மாவட்டம் முழுதும், காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எஸ்.பி., ஸ்ரீஅபிநவுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.கடற்கரை கிராமங்களான பெராம்பட்டு, பரங்கிப்பேட்டை, சின்னுார், நொச்சிக்காடு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது போலீஸ் நிலையங்களில் செய்த முன்னேற்பாடுகள் குறித்து ஐ.ஜி., நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறுகையில்,
'புயல் பாதித்தால் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மேலாண்மை குழு, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைக் குழு, மாநில பேரிடர் மேலாண்மைக்குழுவினர் என, 450 பேர் தயார் நிலையில் உள்ளனர். புயல் பாதுகாப்பு மையங்களில் தலா ஒரு போலீஸ்காரரை வாக்கி டாக்கியுடன் நியமித்து உள்ளோம்.மாவட்டத்தின் வழியாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் 260 கி.மீ., செல்கிறது. 10 கி.மீ துாரத்திற்கு ஒரு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆம்புலன்ஸ் வாகனம், ஜே.சி.பி., இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம் இருக்கும்.
ஒவ்வொரு குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட 10 கி.மீ., துாரத்திற்குள் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இக்குழுவினர் விரைந்து செயல்படுவர். பொதுமக்கள் அவசரத் தேவைக்கு 1077 அல்லது 100 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம். மேலும், 5 படகுகளில் மீட்புக்குழுவினரும், மீனவர்களுடன் இணைந்து 6 படகுகளையும் காவல்துறை சார்பில் தயார் நிலையில் வைத்துள்ளோம். பொதுமக்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாடலாம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE