சென்னை: சென்னையில் மழைநீரில் சிக்கி தவித்த முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார், நிவாரண முகாமில் சேர்த்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் இன்றிரவு (நவ.,25) புதுச்சேரி - மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கிறது. தற்போது புயலானது கடலூரில் இருந்து 90 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று(நவ.,24) முதலே கனமழை பெய்து வருவதால், சாமானிய மக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாமில் சேர்க்கும் பணியில் மீட்புபடையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மழைநீரில் சிக்கிய முதியவரை போலீசார் பத்திரமாக மீட்டுச்சென்று நிவாரண முகாமில் தங்க வைத்த நிகழ்வு பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மக்களை மீட்கும் பணியினை களத்தில் நின்று செயலாற்றி வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், 'அவசரக் காலக்கட்டங்களில் களத்தில் நின்று பணிபுரிபுவர்களின் கடமைக்கு ஒரு சல்யூட் செலுத்துங்கள். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.
Salute this spirit of service during difficult times. Proud of team @chennaipolice_ pic.twitter.com/CHTFyhfcZM
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 25, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE