மும்பை :அமெரிக்காவில், அடுத்த மாத மத்தியில், முதல் கட்டமாக சிலருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக, மும்பையைச் சேர்ந்த பிரபலமான, 'டிராவல்ஸ்' நிறுவனம், 1.75 லட்ச ரூபாயில், சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுதும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரானா பரவலின் முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை பரவி வருகிறது.
தயாரிப்பு
அமெரிக்காவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி, முன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அமெரிக்காவில், 'பைசர்' நிறுவனம், ஜெர்மனியின், 'பயோன்டெக்' நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.'இந்த தடுப்பூசி, கொரோனாவை ஒழிப்பதில், 95 சதவீதம் திறன் வாய்ந்தது' என, பைசர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
அமெரிக்காவில் இந்த தடுப்பூசியை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம், 15ம் தேதியிலிருந்து, தேர்ந்து எடுக்கப்பட்ட சிலருக்கு, இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை துவங்கவுள்ளது.இந்நிலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த, 'ஜெம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' என்ற சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம், அதிரடியான விளம்பரத்தை, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'தடுப்பூசி சுற்றுலா' திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
பாஸ்போர்ட்
இதற்காக, 1.75 லட்சம் ரூபாய் கட்டணத்தில், அமெரிக்காவில், நான்கு நாள் சுற்றுப்பயண திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு பைசர் தடுப்பூசி போடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், இந்த தடுப்பூசி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறோம்.டில்லி - நியூயார்க் - டில்லி விமான டிக்கெட், மூன்று பகல், நான்கு இரவுகளுக்கான ஒட்டல் கட்டணம், ஒரு தடுப்பூசி ஆகியவை, 1.75 லட்ச ரூபாய் கட்டணத்தில் அடங்கும்.நாங்கள், எந்த தடுப்பூசியையும் வைத்திருக்கவும் இல்லை; வாங்கவும் இல்லை. எங்களின் ஏற்பாடுகள் அனைத்தும், அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். இதற்காக முன் பணமாக, எந்த தொகையும் நாங்கள் வசூலிக்க போவதில்லை. விருப்பமுள்ளவர்கள், தங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வயது மற்றும் உடல் பிரச்னைகள் பற்றி தெரிவித்து, பாஸ்போர்ட் நகலுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.மற்ற நடவடிக்கைகள், அமெரிக்க சுகாகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதிகளின்படி, மேற்கொள்ளப்படும். இவ்வாறு, விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு இல்லை
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய சிறப்பு குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரந்தீப் குலரியா கூறியதாவது:கொரோனா தடுப்பூசி பயன், 100 சதவீதம் உறுதி செயயப்பட்டாலும், இந்திய சந்தையில், அது தாராளமாக கிடைக்க, ஒரு ஆண்டு ஆகும். அமெரிக்காவில் கூட, கொரோனா தடுப்பூசி வினியோகம், ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டள்ள மருத்துவ, சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை அளித்து, தடுப்பூசி வழங்கப்படும். அதனால், அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, இப்பேதைக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE