பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், டில்லியை இன்று முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, வட மாநிலங்களில், விவசாயிகள், தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், பெரு நகரங்களில் இருந்து, குக்கிராமங்கள் வரையில், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு ஊர்களில், தண்டவாளங்களில் அமர்ந்து, ரயில் மறியல் போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதனால், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தங்களது எதிர்ப்பை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதென முடிவெடுத்து, 'டில்லி நகரத்தை முற்றுகையிடுவோம்' என்ற கோஷத்துடன், விவசாயிகள் கிளம்பியுள்ளனர்.இன்று டில்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ஆனால், இதற்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஏற்கனவே கொரோனா தொற்று விஷயத்தில், மக்களை காப்பாற்ற போராடி வரும் நிலையில், விவசாயிகள், எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
போராட்டம் நடத்துவதற்கு, உரிய முறையில் கேட்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் அனைத்திற்குமே, அனுமதி கிடையாது. இதையும் மீறி கூடினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது. எந்தவொரு அசம்பாவித சம்பங்களும் நடக்காமல் தடுக்கும் வகையில், டில்லியின் ஜந்தர் மந்தர், இந்தியா கேட், சவுத்பிளாக், நார்த் பிளாக், பார்லிமென்ட், விஜய் சவுக் என முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE