தமிழக நிலவரம்
1.மின்சாரம் பாய்ந்து வாலிபர் மரணம்
செட்டிபாளையம் : போத்தனூரை அடுத்த செட்டிபாளையம் அருகேயுள்ளது, அரசு பணியாளர் நகர். இங்கு வசிக்கும் ராதாகிருஷ்ணன் மகன் மாரிராஜா, 33. வீட்டில் எலக்ட்ரிக் பிளேட்டுகள் தயாரித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை பணியின்போது, மின்சாரம் பாய்ந்து மயங்கினார். உடன் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச்சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2.கொசுவர்த்தி தீயில் கருகி மூதாட்டி பலி
கோவை : கோவையில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டி மீது, கொசுவர்த்தி தீ பிடித்து பரிதாபமாக இறந்தார்.
சாய்பாபாகாலனி, புது நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அம்சவேணி,82; இரவில் துாங்குவதற்கு முன், கொசுவர்த்தியை பற்ற வைத்து அருகில் வைத்துள்ளார். அயர்ந்து துாங்கி கொண்டிருந்த போது, கொசுவத்தி மீது, பெட்ஷீட் விழுந்து தீ பிடித்தது. உடல் முழுவதும் தீ பரவியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
3.பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
திருப்பூர் : திருப்பூரில், பாலிடெக்னிக் மாணவர் துாக்குமாட்டி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் கே.வி.ஆர்., நகர், புவனேஸ்வர் நகரை சேர்ந்தவர் அஸ்வின், 19; பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வந்தார். ஒற்றை தலைவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.இதனால், மனமுடைந்து இருந்து வந்தார். இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினர். வீட்டில் தனியாக இருந்த அவர் துாக்குமாட்டி இறந்தார். இது குறித்து, சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
4. விழுப்புரத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி.
5. மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி.
வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த புண்ணியகுமார் என்ற 16 வயது சிறுவன், பைக்கில் சென்ற போது, நிவர் புயலால் ஏற்பட்ட பலத்த காற்றில் சிக்கி மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தான்.

இந்திய நிலவரம்
1. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
புதுடில்லி: மேற்கு டில்லியின், விகாஸ்புரி பகுதியைச் சேர்ந்தவர், அட்டம் சிங், 70. இவர், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அட்டம் சிங்கை, இரு சக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கியால் சுட்டனர். இதில், அட்டம் சிங் உயிரிழந்தார்.
2. சிவசங்கர் மீண்டும் கைது
கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில், அம்மாநில முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரை, அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், சிவசங்கர் ஜாமினுக்காக விண்ணப்பித்து உள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கில், சுங்கத் துறை அதிகாரிகளும், நேற்று அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE