சென்னை: சென்னையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
நிவர் புயல் கரையை கடந்தாலும், கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. இதனால் மக்கள் வீட்டின் மேல்பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். முடிச்சூரில், வரதராஜபுரம், லட்சுமிநகர், மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர். ஒருசிலர் மட்டும் தங்கியுள்ளனர். குழந்தைகள், குடும்பத்துடன் தங்கியுள்ள அவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் டேங்க், நிவர் புயலின்போது பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், பெரம்பூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சென்னையில்...
சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால், வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கேகே நகரிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மரங்களும் சாய்ந்துள்ளன.
ஊரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே ஏரி நிரம்பியதால், ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், கீழ்தளத்தில் இருந்த மக்கள் மேல்தளத்திற்கு சென்றனர். அதிகாலையில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் ஏரி நீரானது, கால்வாய் போன்று ஓடுவதால், மக்கள் வெளியே வர முடியவில்லை. அரசு அதிகாரிகள் அங்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE