புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் தாக்குதல் மூலம் ஏற்படுத்திய காயம் அனைவருக்கும் ஆறாத வடுவாக உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பலரும் நினைவுக்கூர்ந்துள்ளனர். இதனால், MumbaiTerrorAttack, MumbaiAttack, Kasab போன்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டானது.

இந்தியாவின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்துப் போனது. அந்த பயங்கரவாதிகள், வரும் வழியில் மீன்பிடி படகில் இருந்தவர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று அதே படகில் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் போல மும்பை கப்பரடே, பத்வார் பார்க் பகுதியில் கரையேறினர்.

பின்னர் குழுக்களாக பிரிந்து மும்பையின் அடையாளமாக விளங்கும் சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட சில இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது. இவர்கள் அங்கிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என யாரையும் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் கண்மூடித்தனமாக சுட்டு கொன்றனர்.

இவர்கள் நடத்திய தாக்குதலில் வெறும் 15 நிமிடங்களில் 50க்கும் மேற்பட்டோர்கள் உயிர்களை பறிகொடுத்தனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதேபோல லியோபோல்டு கபேயில் 11 பேரும், டிரிடென்ட் ஹோட்டலில் 30 பேரும், தாஜ் ஹோட்டலில் 31 பேரும், நரிமன் ஹவுசில் 7 பேரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

மேலும், போலீஸ் வாகனத்தில் கடத்தியும் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் கடந்த 2012ம் ஆண்டு புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு சமீபத்தில் வேறு வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

மும்பையில் நடந்த இந்த கொடூர பயங்கரவாத தாக்குல் நாட்டையை உலுக்கியது. இது நடந்து 12 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அதன் பாதிப்பு மற்றும் காயங்கள் ஆறாத வடுவாக உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இறந்தவர்கள், உயிர் தியாகம் செய்த அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களுக்கு நெட்டிசன்கள் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினர். இந்த பயங்கர சம்பவங்கள் தொடர்பாக பலரும் நினைவுக்கூர்ந்துள்ளனர். இதனால், MumbaiTerrorAttack, MumbaiAttack, Kasab போன்ற ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE