சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி நோக்கி பேரணியாக சென்ற ஹரியானா விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டத்தை கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 'டில்லி சாலோ' என்ற பெயரில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டில்லி நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். விவசாயிகளின் பேரணியையொட்டி நாளை (நவ.,27) வரை பஞ்சாப் - ஹரியானா எல்லையை மூடுமாறு ஹரியானா அரசு உத்தரவிட்டிருந்தது. திட்டமிட்டப்படி இன்று (நவ.,26) காலை ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டில்லி நோக்கி பேரணியாகச் சென்றனர்.

ஹரியானா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்துத் தடுத்தனர். போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னேறிய விவசாயிகள், கருப்புக் கொடிகளுடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஹரியானா போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விவசாயிகளைக் கலைக்க முயன்றனர். மறுபுறம் வேளாண் சட்ட எதிர்ப்பாளர்கள் கற்களை வீசி எறிந்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE