![]()
|
ஏற்கனவே பல வித பிரச்னைகளில் மன வலியோடு இருந்த மக்கள் இந்த நிவர் புயலை எதிர்கொள்ள எந்த சக்தியும் இல்லாமல்தான் இருந்தனர்
![]()
|
புயல் என்ற வார்த்தையே கலவரப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில் அது கரையை நோக்கி வரும்போது தீவிரப்புயலாகவும், கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாகவும் மாறும் என்று இரண்டு நாட்களாக விடிய விடிய ‛லைவ்வாக' மிரட்டியதில் மக்கள் அதிகமாகவே அரண்டுதான் போயிருந்தனர்.
![]()
|
இதை உணர்ந்ததாலோ என்னவோ இயற்கை கனமழையாக மட்டும் மாறி, வந்ததற்கு அடையாளமாக கொஞ்சம் மரங்களை மட்டும் சாய்த்துவிட்டு சாந்தமாக சென்றுவிட்டது.
பொசுக்கென்று விடிவதற்குள் பிரச்னையின்றி எல்லாம் முடிந்ததுவிட்டதில் சில ஊடகத்தினருக்குதான் கவலை, இனி கொஞ்ச காலத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரியைப் பிடித்து தொங்குவதை தவிர வேறு வழியில்லை.
![]()
|
முன் யோசனையுடனும் முன் எச்சரிக்கையுடனும் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் உள்ளீட்ட முன்களப் பணியாளர்களை அனுப்பிவைத்தது பழைய புயலில் இருந்து பெற்ற அனுபவம் கற்ற பாடம் என்பது புரிகிறது.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் முதல்வர் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டது ,இக்கட்டான சூழ்நிலையில் இந்த அரசு மக்களைக் காப்பாற்ற விழிப்புடன் இருக்கிறது என்பதை எடுத்தக் காட்டும் விதத்தில் இருந்தது.
மூன்றாவது நாளாகவும் கல்பாக்கம் வரை சென்று வந்தேன்,மகாபலிபுரம் கடற்கரை தனது சீற்றத்தை
குறைத்துக் கொண்டு அமைதியை கைக்கொண்டிருந்தது.
புயல் அள்ளிப்போட்ட குப்பை கூளங்கள் அர்ச்சுனன் தபசு முன் குவிந்திருந்தது,சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்பதால் மெள்ள அள்ளிக்கொள்ளலாம் ஒன்றும் அவசரமில்லை.
மூன்று நாட்களாக சும்மா சுற்றி சுற்றி வந்த தேசிய பேரிடர் மீட்டு படையினருக்கு வேலை வைக்கும் விதமாக இரண்டொரு மரங்கள் விழுந்து வைக்க
அதை விதம் விதமாக வெட்டி சாலையை சீராக்கிக் கொண்டிருந்தனர்.
பக்கிங்காம் கால்வாய் வழியாக வெள்ளம் போல திரண்டு வந்து கல்பாக்கம் கடலின் முகத்துவாரத்தில் கலந்த மழை நீரை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
மதியத்திற்குள் மகாபலிபுரம் களத்திலும் மக்கள் மனதிலும் நிம்மதியை பார்க்க முடிந்தது காரணம் கரையைக் கடந்தது புயல் மட்டுமல்ல அதை சுற்றி பின்னப்பட்டிருந்த எண்ணிலடங்கா கதைகளும்,கவலைகளும்தான்...
-எல்.முருகராஜ்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement