புதுடில்லி :'நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது; இதனால்,செலவும் அதிகரிக்கிறது. எனவே, ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது தான், நமக்கு இப்போதைய தேவை,'' என,பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சட்டசபை சபாநாயகர் களின், 80ம் ஆண்டு மாநாடு, குஜராத் மாநிலம், கேவாடியாவில் நேற்று முன்தினம் துவங்கியது. மாநாட்டை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரையாற்றினார். பிரதமர் பேசியதாவது:மும்பையில், 2008ல், இதே நாளில் நடந்த கொடூரத்தை, யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் அதிகாரிகள் உட்பட, பொது மக்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
புதிய கொள்கை
அந்த காயங்களை, இந்தியா மறக்காது. அந்த் தாக்குதலின் விளைவு, இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து, பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது.மும்பை தாக்குதல் போல், மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் நாட்டை பாதுகாத்து வரும் வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.நம் அரசியல் சட்டத்தில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் அதி முக்கியமானது, நாம் செய்ய வேண்டிய கடமைகள். அரசியல் சாசனக் கடமைகள் குறித்து, மஹாத்மா காந்தி அதிகமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்ட உரிமைகளுக்கும், கடமைகளுக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது.
நாம் நம் கடமைகளைச் செய்தால், நம் உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படும் என்பது மஹாத்மா காந்தியின் வாக்கு. பழைய சட்டங்களில், தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்படுவது, எளிமை யாக்கப்பட வேண்டும். காலாவதியான சட்டங்களை அகற்றுவது, எளிதாக்கப்பட வேண்டும். ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமல்ல; இது, நம் நாட்டுக்கான தேவையும் கூட. நாட்டின் சில மாத இடைவெளியில், ஏதாவது ஓரு பகுதியில் இடைத்தேர்தலோ, சட்டசபை தேர்தலோ நடந்தபடி உள்ளது; இது, வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்பதில், யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இது பற்றி, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கான வழியை, நாம் ஏற்படுத்த வேண்டும்.நாடு முழுதும் ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அரசுகளால் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்; தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க முடியும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
நன்றி தெரிவிக்கும் நாள்
நாட்டின் அரசியல் சட்டம், 1949ம் ஆண்டு நவ., 26ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், அரசியல் சட்ட தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 71ம் ஆண்டு அரசியல் சட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இந்த நாள், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அரசியல் சட்டத்தை இயற்றிய நம் முன்னோர்களை, நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கனவு கண்ட இந்தியாவை, நாம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, பிரதமர் கூறியுள்ளார்.
புனே செல்கிறார் மோடி
ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனமான, 'அஸ்ட்ராசெனகா' ஆகியவை இணைந்து, கொரோனாவை தடுக்க, 'கோவி ஷீல்டு' என்றதடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியை தயாரிக்க, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள, 'சீரம் இந்தியா' நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, கோவி ஷீல்டின் மூன்றா-ம் கட்ட
பரிசோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, புனேவிலுள்ள சீரம் இந்தியா நிறுவன ஆய்வகத்திற்கு நாளை செல்கிறார். தடுப்பூசி தயாரிப்பு, அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் பற்றி, அதிகாரிகளிடம், பிரதமர் ஆலோசிக்கவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE