சண்டிகர் :மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், ஹரியானாவில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள், கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்ட தடைகளைத் தாண்டி, டில்லி நோக்கி பயணத்தை தொடர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் நலனுக்காக, மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அனுமதி வழங்கவில்லை
இந்நிலையில், 'டில்லி சலோ' என்ற பெயரில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லிக்கு பேரணி செல்லும் போராட்டத்தை, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அறிவித்தன.'பாரதிய கிசான் யூனியன்' என்ற பெயரில், 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து, இரண்டு நாள் பேரணி, போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, பஞ்சாபில் இருந்து, டிராக்டர்களில், விவசாயிகள் நேற்று பேரணியை துவக்கினர்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, ஹரியானா அரசு, இந்தப் பேரணி, போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.பஞ்சாபில் இருந்து டில்லிக்கு செல்லும் வழியில் தங்களுடைய பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும், ஹரியானா அரசு, சாலை தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அமிர்தசரஸ் - டில்லி நெடுஞ்சாலையில், கக்கர் நதியில், மாநில எல்லையில், ஷம்பு பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் மீது, ஹரியானா போலீசார், பல்வேறு சாலை தடுப்புகளை அமைத்திருந்தனர். மேலும், மணல் ஏற்றிய லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.இதையடுத்து, விவசாயி கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை தடுப்புகளை ஆற்றில் வீசினர். லாரிகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், தண்ணீரை பீய்ச்சி அடித்து, போராட்டக்காரர்களை திரும்பி செல்லும்படிஎச்சரித்தனர்.
ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசார் மீது கற்களையும், கம்புகளையும் வீசினர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக, அந்தப் பகுதியில் கடும் போராட்டம் ஏற்பட்டது. பின், தடைகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, பேரணி தொடர்ந்தது.அதே நேரத்தில், ஹரியானாவில், தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில், இது போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை உடைத்தெறிந்து, டில்லிக்கு பேரணி தொடர்ந்தது.
டில்லியிலும் தடை
கொரோனா வைரல் பரவல் அதிகமாக இருப்பதால், இந்த பேரணிக்கு, டில்லி அரசும் அனுமதி தரவில்லை. டில்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.அதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும், மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.இந்தப் போராட்டம் குறித்து, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஜொகிந்தர் சிங் கூறியதாவது:இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில், 25 ஆயிரம் பெண்கள் உட்பட, இரண்டு லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக, 700 டிராக்டர்களில், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் பயணத்தை துவக்கிஉள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, ஹரியானாவின் குருகிராமில் இருந்து டில்லிக்கு, 50 விவசாயிகளுடன் பேரணி மேற்கொள்ள முயன்ற, சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், தடுத்து நிறுத்தப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE