சென்னை:தி.மு.க., இளைஞரணி செயலர் உதய நிதியின் மிரட்டல் பேச்சை தொடர்ந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரின் மிரட்டல் பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன. 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், தி.மு.க., தரப்பில் இருந்து, 20 முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
சமீபத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், 'அவரு தான், ஸ்பெஷல் டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ்; பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்; இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல் துறையா; நாங்க பார்க்காத காவல்துறையா...' என, மிரட்டல் விடுத்து பேசினார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, சமூக வலைதளங்களில் பரவி, போலீஸ் துறையில் மட்டுமின்றி, அனைத்து அரசு துறைகளின் அதிகாரிகள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொன்னேரியில் நடந்தது. அந்த கூட்டத்தில், உதயநிதி பாணியில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் பேசியுள்ளார்.
அவரது பேச்சு விபரம்:தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நாம் சொல்பவர் தான் தாசில்தார்; வட்டார வளர்ச்சி அதிகாரி. நாங்கள் கை காட்டுபவர்கள் தான், சப் - இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்படுவர்.தொண்டர்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும், நாம் போட்ட அதிகாரிகள் தான்; அவர்கள் நமக்காக செயல்படுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.அவரது பேச்சை, தி.மு.க., தொண்டர்கள் விசில் அடித்து வரவேற்றுள்ளனர்.
ஆனால், பொது மக்கள் முகம் சுளித்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், உதயநிதி பாணியில், மாவட்ட பொறுப்பாளரின் சவடால் பேச்சு, பொதுமக்களை மிரள வைத்துள்ளது. இதனால், 'தி.மு.க.,வில், மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை உள்ள நிர்வாகிகள், இப்போதே மிரட்டல் விடும் வகையில் பேசுகின்றனர்.'இவர்கள் ஆட்சிக்கு வந்தால், மோசமான நிர்வாகம் தான் நடக்கும்; நேர்மையான நிர்வாகம் நடக்காது; ரவுடித்தனம் பெருகிவிடும்' என, சமூக வலைதளங்களில், பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE