முறைகேடுகளை தட்டி கேட்டால் தடாலடி 'டிரான்ஸ்பர்!'
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையே பெரியவர்கள், பெஞ்சில் ஆஜராகினர். சூடான டீயை பருகியபடியே, ''கரூரை விட்டு போயிட்டதால, அமைச்சர் கை ஓங்கிடுத்து ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், குப்பண்aணா.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான தம்பிதுரை, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காரர்... பெரும்பாலும் கரூர் தொகுதி எம்.பி.,யாவே தான் இருந்தார் ஓய்...
''குறிப்பா, 2009ல இருந்து, 2019 வரைக்கும் கரூர் எம்.பி.,யா, 10 வருஷமா இருந்ததால, 2011, 2016 சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வுல, இவரது பங்களிப்பு நிறைய இருந்தது... போன, 2019 தேர்தல்ல, கரூர்ல தம்பிதுரை தோத்து போனதுல இருந்து, கரூருக்கு வரதையே குறைச்சுட்டார் ஓய்...
''இதனால, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கை ஓங்கிடுத்து... 'வர்ற தேர்தல்ல, வேட்பாளர் தேர்வுல, தம்பிதுரை தலையீடு இருக்காது'ன்னு அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மாறி மாறி வரவேற்பு குடுத்து, தொகுதிக்கு துண்டு போடுதாவ வே...'' என, வேறு விஷயத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர் நரசிம்மன்... ஏற்கனவே, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், அரக்கோணம் எம்.பி.,யுமா இருந்தவர் அரி... ரெண்டு பேருமே, வர்ற சட்டசபை தேர்தல்ல, தொகுதிக்கு குறி வச்சிருக்காவ வே...
''கடந்த நாலு வருஷத்துல, முதல்வர் இ.பி.எஸ்., திருத்தணி வழியா, ஒன்பது முறை திருப்பதிக்கு போனாரு... அப்ப, இவங்க ரெண்டு பேரும், தனித்தனி இடத்துல, முதல்வரை வரவேற்று, வழியனுப்பி வச்சாவ வே...
''சமீபத்துல, முதல்வர், 10வது முறையா திருப்பதி போனப்ப, நரசிம்மன், 1 கி.மீ.,க்கு டிஜிட்டல் பேனர், வாழை மரங்களை கட்டி, முதல்வருக்கு வரவேற்பு குடுத்தாரு... இவருக்கு அரி சளைச்சவரா...
''அவரும், தன் பங்குக்கு, தனியா 1 கி.மீ.,க்கு பேனர், வாழை மரங்களை கட்டி, பேண்டு வாத்தியம் முழங்க, முதல்வருக்கு வரவேற்பு குடுத்தாரு... 'இந்த ரெண்டு பேர்ல, யாருக்கு
முதல்வர் சீட் குடுப்பார்'னு, திருத்தணி அ.தி.மு.க.,வினர் பட்டிமன்றமே நடத்திட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தப்பை தட்டிக் கேட்டா, மாத்திடுறாங்க பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''காஞ்சிபுரத்துல, 23 கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்கள் இருக்குது... இந்த சங்கங்களுக்கு உயரதிகாரியா இருந்த இணை இயக்குனர் செல்வம், ஊழல் புகார் மீது பல நடவடிக்கைகளை எடுத்தாரு பா... ஊழல் புகார்ல சிக்குன, அண்ணா கைத்தறி சங்க தலைவரும், அ.தி.மு.க., நிர்வாகியுமான செல்வராஜை தகுதி நீக்கம் செஞ்சாரு...
''இதனால, அதிருப்தி அடைந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், கைத்தறி துறை அமைச்சரை பார்த்து, செல்வத்தை பணியிட மாற்றம்
பண்ணிட்டாங்க பா... அப்புறமா, அண்ணா கைத்தறி சங்கத்துல, நிர்வாக இயக்குனரா இருந்த தமிழரசி, முறைகேடுகள் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க... அமைச்சரை பார்த்து, தமிழரசியையும் மாத்திட்டாங்க... இதனால, நெசவாளர்கள் அதிர்ச்சியில இருக்காங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE