புதுடில்லி :புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், டில்லி எல்லையில் நேற்று காலை முதல் குவிந்தனர். அங்கு, பெரும் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி, விவசாயிகளை மத்திய அரசு, டில்லிக்குள் அனுமதித்தது.
விவசாயிகள் நலனுக்காக, மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு மாநில விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கண்ணீர் புகை குண்டு
இந்நிலையில், 'டில்லி சலோ' என்ற பெயரில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லிக்கு பேரணி செல்லும் போராட்டத்தை, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அறிவித்தன.'பாரதிய கிசான் யூனியன்' என்ற பெயரில், 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து, இரண்டு நாள் பேரணி, போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுஇருந்தது.
அதன்படி, பஞ்சாபில் இருந்து, டிராக்டர்களில், விவசாயிகள் நேற்று முன் தினம் பேரணியை துவக்கினர். போலீசாரின் தடைகளை மீறி, ஆயிரக்கணக்கான விவசாயிகள், டில்லி எல்லையில், நேற்று காலை முதல் குவியத் துவங்கினர். அவர்கள் டில்லிக்குள் நுழைய முடியாத வகையில், அனைத்து சாலைகளையும் அடைத்து, போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். 'பேரிகாட்' மற்றும் மணல் மூட்டைகளுடனான லாரிகளை அரணாக வைத்து, தடுப்பு கள் அமைக்கப்பட்டன. ஆளில்லா சிறிய ரக கண்காணிப்பு விமானங்கள், வானத்தில் வட்டமிட்டபடி இருந்தன.ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர்களில் ஊர்வலமாக குவிந்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில், சிங்கூ எல்லையில், கலவரம் வெடிக்கும் நிலை உருவானது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
பெரிய பள்ளங்கள்
டிக்ரி எல்லையில், தடுப்பு அரணாக போலீசார் நிறுத்தி வைத்திருந்த மணல் லாரிகளை, டிராக்டர் உதவியுடன், விவசாயிகள் அப்புறப்படுத்த துவங்கினர். இதையடுத்து, போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து, விவசாயிகளை கலைத்தனர்.நேரம் செல்ல செல்ல, நிலைமை மோசமானது. டில்லி எல்லை முழுதும், புகை மண்டலமாக காட்சி அளித்தது. போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்தனர். அங்கு பெரும் கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது.டில்லி எல்லை முழுவதுமாக மூடப்பட்டதால், டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். டில்லியை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள் முழுதும், விவசாயிகள் கடல் போல் அணிவகுத்து நின்றனர்.
பல்வேறு இடங்களில், தடுப்புகளை மீறி, டில்லிக்குள் வர, விவசாயிகள் முயன்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், விவசாய சங்க பிரதி நிதிகளை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.டில்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள, நிரன்காரி மைதானத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை, 3:00 மணி முதல், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன், விவசாயிகள் டில்லிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசின் இந்த முடிவை, பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங் வரவேற்றார். ''போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், மத்திய அரசு உடனடியாக பேச்சை துவக்க வேண்டும்,'' என, அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் விவசாயிகள் டில்லி செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில், ஹரியானா மாநில அரசும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. சில இடங்களில், சாலைகளில் மிகப் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. ஆனாலும், விவசாயிகள் தொடர்ந்து முன்னேறி, டில்லி எல்லையில் குவிந்தனர்.
பேச்சு நடத்த தயார்!
விவசாயிகள், அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு, எந்த தடையும் இல்லை. டிச., 3ல், விவசாய சங்கத்தினருடன், மீண்டும் பேச்சு நடத்தவுள்ளோம். இதற்கு, விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.நரேந்திர சிங் தோமர்மத்திய விவசாய அமைச்சர், பா.ஜ.,
போலீஸ் கோரிக்கை டில்லி அரசு மறுப்பு
டில்லியின், சிங்கூ மற்றும் டிக்ரி எல்லையில் குவிந்த விவசாயிகள், கற்களை வீசி எறிந்து, தடுப்புகளை அகற்றி, முன்னேற துவங்கினர். இதனால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில், கைது செய்யப்படும் விவசாயிகளை அடைப்பதற்காக, டில்லியில் உள்ள ஒன்பது மைதானங்களை தற்காலிக சிறையாக பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி, ஆம் ஆத்மி அரசிடம், போலீசார் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி அளிக்க, டில்லி அரசு மறுத்துவிட்டது.''அமைதியான முறையில் போராட்டம் நடத்த, அனைத்து குடிமக்களுக்கும், அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது. இதற்காக, அவர்களை சிறையில் அடைக்க முடியாது,'' என, டில்லி உள்துறை அமைச்சர், சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE