சென்னை : 'கணக்கு எடுக்கிறோம் என்று காலம் தாழ்த்தாமல், சேதங்களுக்கு உடனே இழப்பீட்டு தொகையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியும் அரசு அளிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை.கே.கே.நகர், அசோக்நகர், திருவொற்றியூர், கொளத்துார் சட்டசபை தொகுதியில் உள்ள பல இடங்களில், மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால், பாதிப்புகள் குறைந்து விட்டது எனக்கூறும் முதல்வரும், அமைச்சர்களும், இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றி கவலைப்படாமல் பேட்டி கொடுக்கின்றனர். இது, 'நிவர்' சாதனை என செயல்
படுவது, மிகுந்த வேதனை அளிக்கிறது.மாநகரில், புறநகரில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மின்சாரத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற, முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல், உடனே வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிவாரண உதவிகள்
மயிலாப்பூர் நொச்சி நகர், டுமீங்குப்பம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிகளில், கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், ௧,௦௦௦ பேருக்கு, 5 கிலோ அரிசி, போர்வை, ரொட்டி, பால் பாக்கெட்டுகளை வழங்கினார்.மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.
கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர்கள் தவிப்பு
ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை:அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் வழியாக, ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால், அவர்களால், கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து, ஏற்கனவே முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. தனியார் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்த, பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ் கட்டணம் செலுத்த இயலாததால், கேட்டரிங் பணிகளுக்கு சென்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவியர் பிரித்திஷா, விஜயலட்சுமி, பவானி ஆகியோரும், தனியார் கல்லுாரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரி செய்ய, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரிகளில் இடங்களையாவது ஒதுக்கி தாருங்கள். முன்னர் அறிவித்தபடி, தி.மு.க., அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலினுடன் எஸ்.வி.சேகர் திடீர் சந்திப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவராக வெற்றி பெற்ற முரளி ராமநாராயணன் தலைமையில், செயலர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் வந்திருந்த தமிழக பா.ஜ., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், ஸ்டாலினை சந்தித்து பேசினார். இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு, எஸ்.வி.சேகர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதனால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், அ.தி.மு.க., ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் வி.பழனி தலைமையில், மாற்றுக்கட்சி நிர்வாகிகள், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE