மும்பை:நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களாவை இடிக்க, மும்பை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனிப்போர்இங்கு, நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், பெரும் புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தை வைத்து, மும்பை போலீசாரை கடுமையாக விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், மஹா., அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே, மும்பையின் பாந்திரா பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவில், சட்டவிரோதமாக, சில கூடுதல் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை இடித்தனர். இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா முறையிட்டார். அதில், இழப்பீடாக, 2 கோடி ரூபாய் வழங்கக்கோரி வேண்டுகோள் விடுத்தார். பின், பங்களாவை இடிக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் கதவல்லா, சாக்லா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் பங்களாவை இடிக்க, மும்பை மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடவடிக்கை
இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கங்கனாவின் பங்களாவை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்தது, தவறான மற்றும் சட்டவிரோதமான செயல். அவருக்கு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய உள் நோக்கத்துடன், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்காக நியமிக்கப்படும் மதிப்பீட்டாளர், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், இழப்பீடுகளை மதிப்பீடு செய்து, உத்தரவு பிறப்பிப்பார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE