புதுடில்லி:'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமினை, மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவின், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த, கட்டட உள் அலங்கார வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயாரை, தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், 'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உட்பட மூவரை, கடந்த, 4ம் தேதி போலீசர் கைது செய்தனர்.ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அர்னாப் மனு தாக்கல் செய்தார். அதை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், அர்னாப் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப் பட்டது. மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், அர்னாப் மனு தாக்கல் செய்தார். அவருக்கும், மற்ற இருவருக்கும், உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், அர்னாபுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை, மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது:தனிமனித சுதந்திரம் என்பது, மென்மையிலும் மென்மையானது. குடிமக்களின் விழிப்புணர்வு, ஊடகங்களின் தொடர் கண்காணிப்பு, நீதிமன்றங்களின் சட்ட விதிமுறைகள் ஆகியவையே தனிமனித சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றன.
அர்னாபின் மனு குறித்து, மும்பை உயர் நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகள் குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ, கீழமை நீதிமன்றங்களோ அனுமதிக்கக் கூடாது.குற்றவியல் சட்டம், குடிமக்களின் மீதான துன்புறுத்தலுக்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை, நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். ஒரு நாளாக இருந்தாலும், தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தவறானது.மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து உரிய முடிவெடுக்கும் வரை, ஜாமின் நீட்டிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE