புதுடில்லி:''பாரத் பெட்ரோலியத்தின் சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு, மானியம் தொடர்ந்து வழங்கப்படும்,'' என, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
நம் நாட்டில் அரசின் சார்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர்களை மானியத்துடன் பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.இவற்றில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் சமையல் காஸ் மானியம் குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களுக்கு சமையல் காஸ் மானியம் வழங்குவதில் எவ்வித பிரச்னையும் இல்லை.நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், 14.2 கிலோ எடையுள்ள, 12 சமையல் காஸ் சிலிண்டர்கள் ஆண்டு தோறும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இதன்படி, அரசு தரப்பிலான மானிய தொகை வாடிக்கை யாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு சிலிண்டர் வினியோகத்திற்கு முன்பாகவே மானியம், 'டிஜிட்டல்' முறையில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.நாட்டில் உள்ள, 28.5 கோடி சமையல் காஸ் இணைப்புகளில், 7.3 கோடி இணைப்புகள், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமானவை.
இதன் வாடிக்கையாளர்களுக்கு அரசு தரப்பில் நேரடியாக மானியத்தை வழங்குவதால், நிறுவனத்தின் உரிமையாளர் குறித்து, பொதுமக்கள் கவலைப்படை தேவைஇல்லை.பாரத் சமையல் காஸ் வாடிக்கையாளர்களை, இண்டேன் அல்லது எச்.பி., நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துகொள்ளும்படி கூறுவதற்கான வாய்ப்பும், தற்போதைய சூழ்நிலையில் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE