விழுப்புரம் : ராணுவ மலிவு விலை அங்காடியில் பொருட்கள் வழங்காததால், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் காகுப்பம் சாலையில், ராணுவ வீரர்களுக்கான மலிவு விலை அங்காடி செயல்பட்டு வருகின்றது. இங்கு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் மாஜி ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மதுபான வகைகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த அங்காடி வாரந்தோறும் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையும், புதன் கிழமை மட்டும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில், அரசு பொது விடுமுறையால், ராணுவ அங்காடி திறக்கவில்லை. இதையடுத்து, பொருட்கள் வாங்குவதற்காக ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வந்தனர். அப்போது, பொருட்களின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்வதற்காக, 27 மற்றும் 28ம் தேதிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறினர்.
இதனால், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், விழுப்புரம்-புதுச்சேரி சாலை ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 12:15 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு, ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலைந்து சென்றனர். பின், அவர்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE