திருக்கழுக்குன்றம் : இரும்புலிச்சேரி பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக மண்பாதை, வெள்ளப்பெருக்கால், நான்காவது முறையாக சேதமடைந்தது.திருக்கழுக்குன்றம் அருகே, பாலாறு செல்லும் இடத்தில், இரும்புலிச்சேரி - எடையாத்துார் கிராமங்கள் உள்ளன.
இதில், இரும்புலிச்சேரி- - நெரும்பூர் பாலாற்று இடையே, 30 ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், 2015ம் ஆண்டு கனமழை வெள்ளப்பெருக்கில், முற்றிலும் சேதமடைந்தது.பொதுமக்கள் வசதிக்காக, சேதமடைந்த பழைய பாலத்தின் கிழக்கு பகுதியில், 500 மீ., தொலைவில், பெரிய குழாய்களுடன், தற்காலிகமாக மண் பாதை அமைக்கப்பட்டது. இதுவும், 2015- - 17 இடைப்பட்ட காலத்தில், மூன்று முறை உடைந்து, தற்காலிகமாகவே சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நேற்று, நான்காவது முறையாக, தற்காலிக பாதை சேதமடைந்தது.
தகவலறிந்த வருவாய், நெடுஞ்சாலை மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருக்க, தடுப்புகள் ஏற்படுத்தினர். பாலாற்றின் இரு புறத்திலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.பாதை சேதத்தால், இரும்புலிச்சேரி மக்கள், நெரும்பூருக்கு, 10 கி.மீ., திருக்கழுக்குன்றத்திற்கு, 18 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE