சென்னை:'நிவர்' புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு போதுமான தண்ணீர் வராதது, வனத்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஏரிகள் ஆக்கிரமிப்புஆண்டுதோறும், 140க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வந்து செல்கின்றன.சுற்றுப்புற ஏரிகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், நீர் வரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு நவம்பர், 1ல் பறவைகள் சீசன் துவங்கவில்லை.
நிவர் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில், 30 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டியது. இதனால், பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.நீர்நிலைகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், வேடந்தாங்கல் ஏரிக்கு போதுமான நீர் வராததால் பறவைகள் கூடு கட்ட தயங்குகின்றன. மொத்தம், 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரியில், தற்போதைய நிலவரப்படி, 10 அடி வரையே நீர் உள்ளது; 6 அடி நீர் பற்றாக்குறையாக உள்ளதால், வலசை பறவைகள் பாதிக்கப்படுகின்றன.
வழித்தடம் தடுப்பு
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:இங்குள்ள வளையாபுத்துார் ஏரிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி, வேடந்தாங்கலுக்கு வரும்; இந்த வழித்தடம் தடுக்கப்பட்டுள்ளது.இதன்பின், வளையாபுத்துார் ஏரி நிரம்பும் போது, உபரி நீரையாவது வேடந்தாங்கலுக்கு கொண்டு வர வேண்டும். ஆனால், தற்போது வளையாபுத்துார் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் மதுராந்தகம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது.இதனால், வலசை பறவைகளுக்கு பயன்பட வேண்டிய நீர், கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, வருவாய் துறையினரிடம் வனத்துறையினர் பேசி வருகின்றனர்.இந்த விஷயத்தில், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறையினர் மிகுந்த அலட்சியம் காட்டுவதால், வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு, வருவாய் துறையினருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE