சென்னை:பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை, நிரந்தரமாக திறக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி மீனவர் குடும்பத்தை சேர்ந்த, உஷா என்பவர் தாக்கல் செய்த மனு:பழவேற்காடு ஏரியை நம்பி, 12 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பிழைக்கின்றன. பறவைகள் சரணாலயமாகவும், இந்த ஏரி திகழ்கிறது. முறையாக துார் வாரப்படாததால், கழிவுகள் குவிகின்றன; ஏரி, மாசடைந்து வருகிறது.ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரத்தை துார் வாரினால், நீர் தடையின்றி வரும். எனவே, முகத்துவாரத்தை துார்வார உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் போத்திராஜ் ஆஜராகி, ''ஏரி முகத்துவாரத்தை நிரந்தரமாக திறக்க, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.
மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, ''மாநில அரசின் அறிக்கையை எனக்கு வழங்கினால், தொடர் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்,'' என்றார். இதையடுத்து, மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கை நகலை, உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கு வழங்கவும், அதை பரிசீலித்து பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE