சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல் புகார் குறித்து, நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், இன்று விசாரணையைத்துவக்குகிறது.
ஊழல் புகார் தொடர்பான ஆதாரங்கள் வைத்திருப்போர், ஆணையத்தில் இன்று முதல், நேரில் புகார் அளிக்கலாம். அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் உள்ளிட்டவற்றில், 280 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக, தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆணையத்திற்கு, சென்னை பசுமை வழிச்சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் என, கமிட்டியின் உறுப்பினர்களாக,13பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும், சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றனர்.
இந்த ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகள், இன்று துவக்க உள்ளன.சுரப்பா மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் உள்ளவர்கள் மற்றும் வேறு புகார் இருப்பவர்கள் நேரடியாக விசாரணை அலுவலகத்துக்கு வந்து, இன்று முதல் புகார் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசுக்கு புகார் அளித்தவர்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பி, விசாரணை நடத்தப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE