சென்னை:'மாமனார் பைனான்ஸ் தொழில் செய்ததால், வீட்டில், 5 கோடி ரூபாயாவது தேறும் என மூவரையும் கொன்றோம்' என, போலீஸ் காவலில், ஜெயமாலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, சவுகார்பேட்டையை சேர்ந்தவர் தலித் சந்த், 74; இவரது மனைவி புஷ்பா பாய், 70; மகன் ஷீத்தல்குமார், 40. மூவரும், நவம்பர், 11ல், சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், 33, விஜய் உத்தம் கமல், 28; ரவீந்திரநாத்கர், 25 ஆகியோர், மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, சோலாப்பூரில், இம்மாதம், 13ம் தேதி, தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின், டில்லி அருகே ஆக்ராவில், ஜெயமாலா, 34; அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், 28; ராஜிவ் ஷிண்டே, 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு துப்பாக்கி மற்றும் கார் கொடுத்து உதவிய, ராஜஸ்தானைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ் துபேயும், 55, கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெயமாலா, விலாஷ், ராஜிவ் ஷிண்டே ஆகியோர், நவ., 24ல் இருந்து, 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகின்றனர். அப்போது, ஜெயமாலா அளித்துள்ள வாக்குமூலம்: கணவர் தெளிவான மனநிலை இல்லாதவர். இதனால், கணவரின் உறவினர்கள், நான் குளிக்கும் போது வீட்டிற்கு வருவது, உறவுக்கு அழைப்பது போல பேசுவது, உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு பேசுவது என, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். கணவரிடம் தெரிவித்தேன்; கண்டுகொள்ளவில்லை. மாமியாரும், கூட்டுக் குடும்பத்தில் இதுவெல்லாம் சகஜம் என்றார்.
இனி, இங்கு வாழவே முடியாது என்ற நிலையில், இரு மகள்களுடன், புனேயில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றேன்.மாமனார் பைனான்ஸ் தொழில் செய்ததால், மகள்களின் எதிர்காலம் கருதி, 7 கோடி ரூபாய் கேட்டேன். பின், 5 கோடி ரூபாயாவது தாருங்கள் என, கெஞ்சினேன். பல கட்ட பேச்சுக்கு பின், 1.50 கோடி தருவதாக கூறினார்.அதன்பின், அந்த ரூபாயையும் தராமல், சென்னைக்கு வந்து தன் மகனுடன் குடும்பம் நடத்துமாறு கூறினார்.
இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.என் சகோதரர்கள், கைலாஷ், விலாஷ், அவர்களின் கூட்டாளிகள் உதவியுடன், கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை சுட்டுக் கொன்றேன். வீட்டில், 5 கோடி ரூபாயாவது தேறும் என, தேடினோம்; 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. உடன், மாமியார் அணிந்திருந்த, நான்கு வளையல்களை கழற்றி தப்பினோம்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE