சென்னை:ஏ.வி.எம்., எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான, 10 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையை தலைமையிடமாக வைத்து, ஏ.வி.எம்., எர்த் மூவர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. கட்டுமான பணிகள், சுரங்கம் தோண்டுதல் உட்பட, கட்டுமானம் தொடர்பான பணிகளில், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அரசு தொடர்பான பல பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் தி.நகர், நங்கநல்லுார் உட்பட, 10க்கும் மேற்பட்ட, நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில், வரித் துறையினர் நேற்று காலை முதல், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இது பற்றி, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏ.வி.எம்., எர்த் மூவர்ஸ் நிறுவனம், பல நுாறு கோடி ரூபாயை வருவாயில் காட்டாமல், வேறு கணக்கிற்கு பரிமாற்றம் செய்து, வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் கிடைத்தது.அதனால், நிறுவனத்திற்கு தொடர்புடைய, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடந்தது. இருந்தாலும், அந்த இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சோதனையில், பல நுாறு கோடி ரூபாய்க்கு, வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் முடிவில் அதன் மதிப்புகள் தெரியவரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE