சென்னை:மாமல்லபுரம் மேம்பாட்டுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, ஒரு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன், தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்தை, கலாசார சின்னமாக, 'யுனெஸ்கோ' அங்கீகரித்துள்ளது. 'மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அழகுபடுத்த வேண்டும். கலாசாரம், பண்பாட்டை சிதைக்கும் வகையிலான கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது' என, தெரிவித்திருந்தார்.
நீதிபதி கிருபாகரனின் கடிதத்தை வழக்காக, நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு எடுத்தது. மாமல்லபுரத்தை அழகுபடுத்த, பராமரிக்க தேவையான நிதி ஒதுக்குவது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மேம்பாட்டுக்கான, அறிக்கை தயாராக உள்ளது' என்றார். அதற்கு நீதிபதிகள், 'மாமல்லபுரம் பற்றி மட்டுமே, நாங்கள் கேட்டுள்ளோம். அதற்கு, நிதி ஒதுக்கப்பட்டதா, இல்லையா' என கேட்டனர். இன்னும் ஒதுக்கப்படவில்லை என, மத்திய அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.
தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் போத்திராஜ் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் மேம்பாட்டுக்கு எவ்வளவு நிதி என்பதை தெரிவிக்கும்படி, இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் ஆஜராகவும் உத்தரவிட்டு, விசாரணையை, டிசம்பர், 4க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE