கோவை:கெயில் நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு, விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி, நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக,விவசாயிகள் குறைதீர் கூட்டம் இணையவழி மூலம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜாமணி மற்றும் துறை அதிகாரிகள் கலெக்டர் வளாக அரங்கில் இருந்தும், விவசாயிகள் அந்தந்த வட்டார வள மையங்களிலும், இணையவழியாக ஒருங்கிணைக்கப்பட்டனர். காணொளி காட்சி மூலம் நடத்தப்படும் கூட்டம், அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும்படி இல்லை; வழக்கம் போல் நேரடியாக கூட்டம் நடத்த கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், 200 பேர் இக்கூட்டத்தை நேற்று புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''கெயில் நிறுவனம் விலை நிலங்களில் தேக்கு, தென்னை, மா, முருங்கை, வாழை, சோளம் போன்றவைகளை சேதப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. இழப்பீடும் தராமல், விலைநிலங்களில் இரும்பு குழாய்களை இறக்கி, ஒன்றோடு ஒன்று இணைத்து வைத்துள்ளனர்.இதனால், விவசாயிகள் பயிர் செய்ய முடியாமலும், நீர் பாய்ச்ச இயலாமலும், அடுத்த விளைச்சலுக்கு நிலத்தை பண்படுத்த முடியாமலும் உள்ளது. இழப்பீட்டு தொகையை உடனடியாக பெற்றுத்தரவும், குழாய்களை விலைநிலங்களில் இருந்து அகற்றவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE