பேரூர்: மனித-விலங்கு மோதல் அதிகரித்து வரும் கோவை புறநகர் பகுதிகளில், இதற்கு காரணம் யானைகளின் குடிநீர் தேவையே என்பதை கண்டறிந்த, விவசாயி ஒருவர், அவற்றுக்கென தனியாக தண்ணீர் குட்டை அமைத்துள்ளார். தண்ணீர் குடிக்க வரும் யானைகளால் பயிருக்கும், உயிருக்கும் எந்த சேதமும் ஏற்படுவதில்லை என்பதுதான் இதில் ஹைலைட்!
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட போளுவாம்பட்டி வனச்சரக காப்பு காடுகளில், யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக வசிக்கின்றன.இச்சரகத்தில், வனவிலங்கு வழித்தட ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. அதனால், மனித - வனவிலங்கு மோதல், ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.அதில், தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வெளிவரும் காட்டு யானைகளால், மனித உயிர் மற்றும் பயிர்கள் சேதம் அதிகம்.இந்நிலையில், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்கும் விதமாகவும், அவற்றின் தாகத்தை போக்கும் விதமாகவும், விராலியூர் விவசாயி ஒருவர் தன்னுடைய, 50 சென்ட் நிலத்தில் தண்ணீர் குட்டை ஒன்றை அமைத்துள்ளார்.
அந்த குட்டையை தேடி, யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் நாள்தோறும் வருகின்றன. தாகம் தீர்ந்தவுடன், விளைநிலங்களுக்குள் வராமல் வனத்துக்குள் திரும்பி விடுகின்றன.இதனால், மனித - வனவிலங்கு மோதல் தவிர்க்கப்படுவதுடன், பயிர்களும் காக்கப்படுவதாக தெரிவிக்கும் 23 வயதான விவசாயி நந்தகுமார், 'பெரியசாமியே விவசாயிகளின் வாழ்வாதாரம்' என, உரக்கக்கூறி சிலிர்க்க வைக்கிறார்.
அவர் கூறியதாவது:எங்களின், 20 ஏக்கர் விளைநிலம், மலைக்கு மிகவும் அருகில் உள்ளதால், பெரியசாமிகளால் (யானைகள்) பயிர் சேதம் அதிகரித்தது. தண்ணீருக்காகவே அவை வருவதாக அப்பா தெரிவித்தார்.எனது விருப்பத்தின்படி, அப்பா 50 சென்ட் நிலத்தில், தண்ணீர் குட்டை அமைத்தார். போர்வெல் வாயிலாக குட்டையில் தண்ணீரை தேக்கினோம்.
அன்று முதல், பயிர் சேதம் ஏற்படவில்லை. வனவிலங்குகள் குடும்பமாக வந்து தாகம் தீர்த்து செல்கின்றன.ஒரு பெரியசாமி வாயிலாக மாதத்துக்கு, 40 ஆயிரம் மரங்கள் உருவாவதாக படித்திருக்கிறேன். வனம் செழித்தால் மட்டுமே, விளைநிலங்கள் உயிர்ப்புடன் இருக்கும். பெரியசாமியே விவசாயிகளின் வாழ்வாதாரம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE