கோவை:கோவையில், வழிப்பறியின்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்த, நான்கு பேர் கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24. கோவை விமான நிலையம் அருகே, பூங்கா நகரில் தங்கி, காளப்பட்டியில், தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். ஒண்டிப்புதுாரில் உள்ள நண்பர்களை சந்திக்க, அவரது நண்பர் வால்பாறையைச் சேர்ந்த சுஜித், 30, உடன் நேற்று முன்தினம் நள்ளிரவு, பைக்கில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி வழியாக சென்று கொண்டிருந்தார்.
பிருந்தாவன் நகர் அருகே, நான்கு பேர் கும்பல் அவர்களை வழிமறித்து, மொபைல் போன்களை பறிக்க முயன்றது. சுஜித் போனை கொடுத்த நிலையில், விக்னேஷ் தர மறுத்ததால், அவரை, கும்பலைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தினார். மொபைல் போன்களை பறித்து, அக்கும்பல் தப்பியது. சுஜித், அவரது நண்பர்கள் சேர்ந்து, விக்னேஷை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியைச் சேர்ந்த கைலாஷ் என்பவர் சென்ற காரையும், இந்த கும்பல் வழிமறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தப்பிய கைலாஷ், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். போலீசார் அங்கு செல்வதற்குள், விக்னேஷை கொலை செய்துள்ளனர்.போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறுகையில், ''கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE