பேரூர்:அரசின் ஊரடங்கு தளர்வு உத்தரவுகளால், பல மாதங்களுக்கு பின், இலை வாழைக்கு உரிய விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த ஆண்டு, 500 எக்டர் பரப்பளவில் பூவன், நேந்திரன், கதளி மற்றும் இலை வாழை சாகுபடி செய்யப்பட்டது. அதில், சுபமுகூர்த்தங்களை எதிர்நோக்கி, 20 லட்சம் இலை வாழை கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தன.
அதன் அறுவடை மார்ச் மாதத்தில் துவங்கியது. முதல் அறுப்பு முடிந்த சமயத்தில், கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாகியது. சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு தடை, உணவகங்கள் மூடப்பட்டது உள்ளிட்டவையால், வாழை இலை விற்பனை மொத்தமாக நின்று போனது.பெருத்த நஷ்டமடைந்த விவசாயிகள், இலை வாழையை நிலத்தோடு உழுது உரமாக்கினர். சிலர், உழவு கூலியை தவிர்க்க, தோட்டத்துக்கு தீ வைத்து அழித்தனர்.
தற்போது, அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.உணவகங்கள் செயல்படுவதுடன், சுப நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடந்து வருகிறது. இதனால், முடங்கி கிடந்த வாழை இலை வியாபாரம், மீண்டு வருகிறது.நேற்று, விவசாயிகளிடம் இருந்து, 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு, 380 - 460 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. பல மாதங்களுக்கு பின், இலை வாழைக்கு விலை கிடைப்பதால், விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE