திருப்பூர்:'ஐந்து ரக கத்தரி சந்தைக்கு வருவதால், பவானி கத்தரிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது,' என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வழக்கமாக, ஆடி பட்டத்தில் பயிரிடப்படும் பவானி கத்தரி, 80 நாட்களுக்கு பின் புரட்டாசி கடைசியில் விற்பனைக்கு வரும். கார்த்திகை வரை வரத்து தொடரும். நல்ல விலையும் கிடைக்கும்.
நடப்பாண்டும் பொங்கலுார் பகுதி விவசாயிகள் அதிகளவில் கத்தரி பயிரிட்டனர்.ஆனால், எதிர்பாராத வகையில் புரட்டாசி துவக்கத்தில் பருவம் தவறி மழை பெய்தது. வேர்களில் ஈரம் அதிகரித்ததால் காய்ப்பு சற்று குறைந்தது. இருப்பினும், சில நாள் வெயிலின் தாக்கத்தால், காய் பிடிப்பு ஓரளவு இறுதி நேரத்தில் கைகொடுத்தது.விவசாயிகள் கூறியதாவது:கார்த்திகை மாதம் கத்தரியில் காம்பு எல்லாம் விலை விற்கும் என கூறப்படும்.
ஆனால், நடப்பாண்டு அப்படியில்லை. அவ்வப்போது பெய்த மழையால் காய்ப்பு சற்று குறைந்துள்ளது. போதாக்குறைக்கு, 45 முதல், 60 நாளில் காய்ப்புக்கு வரும் ஒட்டு ரகம் சிம்ரன் மற்றும் லலிதா, தொட்டம்பட்டி வரி கத்தரி சந்தைக்கு அதிகளவில் வர துவங்கியுள்ளது.குறைந்த நாளில் காய்ப்பு வரும் இந்த புதிய கத்தரி கிலோ, 35 ரூபாய்க்கு விற்பதால், முதல் ரகமான பவானியை தேடி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், கார்த்திகையில் கிலோ, 80 ரூபாய் வரை விற்கப்படும் கத்தரி; தற்போது, கிலோ, 50 ரூபாய்க்கே விற்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE