மதுரை:மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை, புது மாகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த, மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம், 2016ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அவர்களுக்கு சமூகத்தில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு சொத்துரிமை, கடனுதவி பெறும் உரிமை உள்ளது. திருச்சியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் உள்ளது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, 'போக்சோ' மற்றும் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.மாற்றுத் திறனாளிகள் வழக்குகளை விசாரிக்க, டில்லியில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், மாவட்டந் தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அவர்கள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உட்பட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, மத்திய சமூக நீதித்துறை செயலர், தமிழக சட்டத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்கள் ஒத்திவைத்தது.
வீரர்களுக்கு பணி
மதுரை ஜி.எம்.எஸ்., பவுண்டேஷன் தலைவர் ராஜகுமாரி ஜீவகன் தாக்கல் செய்த பொதுநல மனு:சர்வதேச, தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், மதுரை தீபா, சங்கீதா ஆகியோர், தங்கம் உட்பட, 84 பதக்கங்கள் வென்றுள்ளனர். தீபா எம்.ஏ., - எம்.பில்., படித்துள்ளார். தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்று உள்ளார்.
சாதனை படைத்த இவ்வீரர்கள், அங்கீகாரம், வேலைவாய்ப்பின்றி சிரமப்படுகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில், அரசு இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இருவருக்கும் பணி வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
பரிசீலித்து முடிவு
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், பணி வழங்குவது குறித்து, பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க வேண்டும். 'இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, டிச., 17ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE