மதுரை:பட்டா பெயர் மாற்றத்திற்கு, தலையாரி மற்றும் வி.ஏ.ஓ., 5,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ஷெரீப். இவரது தாயார் மதினா, போக்குவரத்து நகரில் வாங்கிய நிலத்தின் பட்டா பெயர் மாறுதலுக்கு, தாலுகா அலுவலகத்தில், 'ஆன்லைனில்' மனு செய்தார். நிலத்தை பார்வையிட, நேற்று தலையாரி பெருமாள் சென்றார். பட்டா பெயர் மாற்றத்திற்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், முடித்து கொடுப்பதாக பேச்சு நடந்துள்ளது. இதற்காக தலையாரி, தன் மொபைல் போனில் இருந்து, வி.ஏ.ஓ., பெரியசாமியை தொடர்பு கொண்டார்.
தலையாரி: சார், அவங்க குறைக்க முடியுமான்னு கேட்கிறாங்க. இந்தாங்க பேசுங்க...
ஷெரீப்: அண்ணே... வணக்கம்
வி.ஏ.ஓ.,: ஜெனரலாக வாங்குதற சொல்லியிருப்பாரு போல
ஷெரீப்: பார்த்து பண்ணுங்க. பக்கத்துல விசாரிச்சேன். 3,000 ரூபாய் என சொன்னாங்க
வி.ஏ.ஓ.,: 5,000 ரூபாய் கொடுத்தால், அவரே எல்லா வேலையும் முடித்து கொடுத்துருவாருண்ணே; 500 ரூபாய் குறைத்து கொடுங்க
ஷெரீப்: என்ன அண்ணே, காய்கறி வியாபாரம் மாதிரி பேசுறீங்க. 500 ரூபாய் குறைச்சுக்குறேன்னு சொல்றீங்க
வி.ஏ.ஓ.,: நான் ஒண்ணும் கேட்கவில்லை. எனக்கும், அதுக்கும் சம்பந்தமில்லை. நான் உன்கிட்ட காசு கேட்கவில்லை. தலையாரி கேட்கிறாரு. சரிங்கப்பா பார்த்து செய்யுங்க என சொல்றேன்
ஷெரீப்: பார்த்து செய்யுங்க. கலந்து பேசிட்டு சொல்றேன்.இவ்வாறு, உரையாடல் நடக்கிறது.
ஷெரீப் கூறுகையில், ''பட்டா பெயர் மாற்றத்திற்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். அதை அலை பேசியில் வீடியோவாக பதிவு செய்தேன்,'' என்றார்.வி.ஏ.ஓ., பெரியசாமி கூறுகையில், ''நான், உயர் நீதிமன்ற பணிக்காக வந்துள்ளேன். பட்டா மாறுதல் தொடர்பாக, யாரிடமும் போனில் பேசவில்லை. ''யாரிடமும், எதற்காகவும், நான் பணம் பெற்றதும் இல்லை. நான் பணம் கேட்டதாக கூறுவது தவறு,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE