ராமநாதபுரம்:சமுதாயத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இளைஞர்கள் எல்லாம் மதுக்கடைகளில் நிற்கின்றனர், என்று ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி வேதனை தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகே நாகாச்சி ஊராட்சியில் ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் பிரார்த்தனை கூடம், சமுதாய கடம், உணவுக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது.மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தாஜி மகாராஜ் தலைமை வகித்து உணவு கூடத்தை திறந்தார்.
ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார்.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி பிரார்த்தனை கூடம், சமுதாய கூடம், சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது:
120 ஆண்டுகளுக்கு முன் ஒரு துறவியால் உருவாக்கப்பட்ட இந்த மடம் இன்று உலக அளவில் வியாபித்து வளர்ந்துள்ளது, என்றால் அவர்களின் ஒழுக்கத்துடன் கூடிய வாழ்வின் அர்த்தமாகத் தான் இதனை பார்க்கிறேன்.ஆனால் இன்று ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் குறைந்து கொண்டே வருகிறது. ஒழுக்க நெறிகளையும், நமது பண்புகளையும், மாண்புகளையும், நாட்டின் பாரம்பரியத்தையும் காப்பாற்ற ராமகிருஷ்ண மடம் போன்ற அமைப்புகள் தான் தங்களை அர்ப்பணித்து வருகிறது.
ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம் எவ்வளவு பெரிய அறிவார்ந்த சமுதாயமாக இருந்தாலும் பயனில்லை. தனது பண்புகளாலும், ஞானத்தாலும் உலகளாவிய அளவில் வென்று காட்டிய ஒரு துறவி சுவாமி விவேகானந்தர்.ஆனால் இன்று நாம், மேலை நாட்டு கலாசாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கடைபிடித்து ஒழுக்கம் என்றால் என்ன என்பதையே மறந்து போனோம்.
அதனால் தான் லஞ்சம் வாங்குவது தவறே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் யாருக்குமே வெட்கமும் இல்லை. அந்த அளவிற்கு இன்று லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் எல்லாம் இன்று டாஸ்மாக் கடைகளில் நிற்கின்றனர். இதை எல்லாம் தடுத்து மக்களுக்கு நல்வழி காட்டுவதை உங்களைப் போன்ற அமைப்பால் தான் செய்ய முடியும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE