திருப்பூர்:பல்லடம் ரோடு, அல்லாளபுரம் பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம், நுனி கருகல் நோய் தாக்கியதால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், அவிநாசி, உடுமலை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், மார்கழி பட்டத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, அவ்வப்போது மழையின் தாக்கம் இருந்தாலும், இரவு நேரத்தில் பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது.இதனால், வெங்காய பயிர்களின் நுனி கருகி, வெளுத்து காணப்படுகிறது. பல்லடம் ரோடு, அல்லாலபுரத்தில் அதிகப்படியான பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பச்சை புழுக்கள், பூச்சி தாக்குதல் காரணமாக நுனி கருகல் நோய் ஏற்பட்டுள்ளது.இது தவிர கடும் பனிப்பொழிவும் சின்ன வெங்காயத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. இது, விவசாயிகளை பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:ஈரப்பதம் காரணமாக இந்த நோய் பரவுகிறது. பயிர்களின் மேல் ஒட்டும் பூச்சிகள் பச்சையத்தை உட்கொள்வதால் அவை வெளுத்து விடுகின்றன.எனவே, ஒரு ஏக்கருக்கு 'சூடோமோனஸ்' ஒரு கிலோ, டிரைகோ டெர்மாவிர்டி ஒரு கிலோ வீதம், இரண்டையும் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கலாம். தவிர, அருகில் உள்ள வேளாண் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய ஆலோசனை பெறலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE