மனித வாழ்க்கையை மையமாகக்கொண்ட இலக்கியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனித வாழ்க்கையை மையமாகக்கொண்ட இலக்கியம்

Added : நவ 28, 2020
Share
பேராசிரியர் ஞானசம்பந்தன் சொல்லியது இது!“இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது. மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது;
 மனித வாழ்க்கையை மையமாகக்கொண்ட இலக்கியம்

பேராசிரியர் ஞானசம்பந்தன் சொல்லியது இது!“இலக்கியம் மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது. மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது. மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது” என்று எடுத்துரைப்பார்.
இலக்கியத்துக்கான ஒரு முன்னுரையாகவும், இதை எடுத்துக் கொள்ளலாம். இலக்கியங்களை, வாழ்க்கையாக கொண்டிருப்போர், அதற்கென தனி வட்டாரத்தையும் வகுத்து வைத்திருக்கின்றனர்.சங்கம் துவக்கி, சில ஆண்டுகள் நடத்துவதே சிரமமான சூழ்நிலையில், 56 ஆண்டுகளாக மாதாந்திர இலக்கிய சொற்பொழிவு நடத்தி அசத்துகிறது, அன்னுார் தமிழ் சங்கம்.அன்னுாரில், 1964ல் துவக்கப்பட்ட தமிழ்ச்சங்கம், 56 ஆண்டுகளாக வெற்றி நடை போடுகிறது.
சிறிய கிராமமான குமாரபாளையத்தை சேர்ந்த புலவர் வெங்கடாசலம், அன்னுாரை சேர்ந்த ஆசிரியர்கள் நடராஜன், லட்சுமணன் உள்ளிட்டோரால், 1964ல் அன்னுாரில் தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமை, மூன்று மணி நேரம் திருக்குறள் வகுப்பு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அப்போதைய, கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் பா.சு. மணியம் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்த்த துவக்கினார். திருக்குறள், நன்னுால், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், நாயன்மார்கள் என, அவர் பேசாத தலைப்புகளே இல்லை. தொடர்ந்து, 20 ஆண்டுகள் அவர் பேசினார்.தமிழ் ஆர்வலர்கள் வித்தியாசமான அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிகழிடத்தை, பண்ணாரி, குருந்தமலை, திருமுருகன்பூண்டி என, மாற்றி வகுப்புகள் நடத்தியுள்ளனர். இங்கு பல பிரபலங்கள் வந்து, மாதாந்திர சொற்பொழிவு பேசியுள்ளனர்.இதுகுறித்து தமிழ் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் அண்ணாச்சி குட்டி ஆகியோர் கூறியதாவது:தமிழ் புலமை வாய்ந்த துரைசாமி ராஜா, கவிஞர் புவியரசு, சொற்பொழிவாளர்கள் இளங்கோ, ராமதாஸ், ராமசாமி என, எண்ணற்ற புலவர்கள், அன்னுார் தமிழ் சங்கத்தில் பேசியுள்ளனர்.
மன்னீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் என பல இடங்களில் மாதாந்திர சொற்பொழிவு நடந்து வருகிறது. திருவாசகம், திருமந்திரம் என, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் சொற்பொழிவாளர்கள் பேசுகின்றனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தமிழ் ஆர்வம் மிக்கவர்கள் என ஒவ்வொரு வகுப்பிலும் பலர் பங்கேற்கின்றனர்.
சொற்பொழிவு முடிந்தவுடன், சொற்பொழிவாளர் உடன் கலந்துரையாடலும் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக, கடந்த ஏழு மாதங்களாக மாதாந்திர சொற்பொழிவு நடத்தவில்லை. எனினும் வருகிற ஜனவரி முதல், மீண்டும் மாதாந்திர சொற்பொழிவு துவங்குகிறது. தமிழை, தமிழ் இலக்கியத்தை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.இலக்கியம் ஒரு கடல்... அதில், முத்தெடுத்து வரும் இவர்களின் பணி பாராட்டத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X