மதுரை:தமிழக
எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்களில் ஹிந்தியை
தவிர்த்து, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க தாக்கலான வழக்கில் மத்திய
அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டது.
மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் தாக்கல் செய்த
பொதுநல மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,)
பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிச., 20 ல் நடத்த அறிவிப்பு
வெளியானது. தேர்வு மையங்கள் 5 வட மாநிலங்களிலும், 2
தென்மாநிலங்களில், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தலா 1
இடமும் அமைந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம்
கூட இல்லை.
தமிழகம், புதுச்சேரி விண்ணப்பதாரர்கள் தேர்வில்
பங்கேற்பதில் சிரமம் ஏற்படும். அவர்களின் நலன் கருதி ஒரு மையம்
அமைக்க, விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க மத்திய உள்துறை
அமைச்சகம், சி.ஆர்.பி.எப்.,இயக்குனர் ஜெனரலுக்கு கடிதம்
எழுதினேன்.
சி.ஆர்.பி.எப்., தரப்பில்,'விண்ணப்பங்களை
பரீசீலிக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள்
அறிவிக்கப்படும்,' என பதில் வந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர்
நித்யானந்த ராயிடமிருந்து வந்த பதில் ஹிந்தியில் இருந்ததால், அதன்
உள்ளடக்கத்தை அறிய இயலவில்லை. ஹிந்தியில் பதில் அளித்ததன் மூலம்
சட்டம் மற்றும் நடைமுறைகள்மீறப்பட்டுள்ளது. இது பற்றி உள்துறை
இணை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் இல்லை. ஹிந்தி
கடிதத்தை திரும்பப் பெறவோ, அப்பதிலின் ஆங்கில வடிவத்தை அனுப்பவோ நடவடிக்கை இல்லை.
தமிழக
எம்.பி.,க்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை
தொடர்கிறது. இது அரசியல் சாசன உரிமைகள், அலுவல் மொழிச்
சட்டத்திற்கு முரணானது.தமிழக அரசு, மக்கள், தமிழக எம்.பி.,களுக்கு மத்திய
அரசு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
நடைமுறைகளை மீறும் அலுவலர்கள் மீது நவடிக்கை எடுக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு வெங்கடேசன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள்
என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு மத்திய உள்துறை இணையமைச்சர்,
உள்துறை இணைச் செயலாளர், சி.ஆர்.பி.எப்.,இயக்குனர் ஜெனரலுக்கு
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.,8 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE