உடுமலை;நகரில், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டச்சாலை பணியை துவக்கி, ஆக்கிரமிப்புகளால், சுருங்கிய, ரோடுகளையும் நகராட்சி நிர்வாகம் மீட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும்.கோவை--திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை நகரம் உள்ளது. நகருக்கு, பை--பாஸ் ரோடு வசதி இல்லாததால், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும், நகரின் மையப்பகுதியில், அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.தற்போது, தேசிய நெடுஞ்சாலையுடன் உடுமலை--தாராபுரம், உடுமலை--பல்லடம் மாநில நெடுஞ்சாலைகளும்; செஞ்சேரிமலை, திருமூர்த்திமலை, அமராவதி நகர், கொமரலிங்கம் ஆகிய மாவட்ட சாலைகளும் இணைகின்றன. இந்த ரோடுகள் வழியாக வரும் வாகனங்கள், பை--பாஸ் இல்லாததால், நகருக்குள் வந்து செல்கின்றன.காலை மற்றும் மாலை நேரங்களில், உடுமலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.பல்லடம், திருப்பூர், செஞ்சேரிமலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஏரிப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வராமல், மற்றொரு எல்லையான கொழுமம் ரோடு சந்திப்புக்கு செல்லும் வகையில், திட்டச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மேம்பாட்டு பணி நடைபெறாததால், திட்டச்சாலை இருந்த இடம் தெரியாமல், போக்குவரத்து தடைபட்டுள்ளது.குறிப்பிட்ட துாரத்துக்கு, விரிவுபடுத்தப்பட்ட திட்டச்சாலையும், லாரி, வேன் உட்பட வாகனங்கள் நிறுத்தும் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது.உடுமலை நகர எல்லைகளில் உள்ள, நான்கு திட்டச்சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ரோடு அமைத்தால், பை--பாஸ் ரோடு இல்லாத பிரச்னை தீரும். இதுகுறித்து, உடுமலை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE